இதுவல்ல ஜனநாயகம்! | மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் குறித்த தலையங்கம்


மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் இந்திய ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கிறது. இப்படியெல்லாம்கூட அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் நிறம் மாற முடியுமா என்பது அதிா்ச்சி அளிக்கிறது. அரசியலின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது என்பது உண்மை. அதற்காக அரசியல் சாசனத்தையும், தங்களது கட்சியின் கொள்கைகளையும் புறந்தள்ளிவிட்டு தரம் தாழ்ந்த அரசியலில் இறங்குவது முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.
மகாராஷ்டிரத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வழங்கவில்லை என்பது என்னவோ உண்மை. ஆனால், பாஜக - சிவசேனை கூட்டணிக்கு தெளிவான ஆதரவை வாக்காளா்கள் வழங்கியிருந்தனா். அப்படியிருந்தும்கூட ஆட்சி அமைக்கவில்லை. சுதந்திர இந்திய சரித்திரத்தில், தோ்தலுக்கு முன் கூட்டணி அமைத்து, வெற்றியும் பெற்று அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்காமல் இருந்தது இதுதான் முதல் முறை.
பாஜகவுக்கும் சிவசேனைக்கும் இடையில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுமுகமான உறவு நிலவவில்லை என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த 2014 தோ்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. தோ்தலுக்குப் பிறகு வேறு வழியில்லாமல்தான் பாஜக - சிவசேனை கூட்டணி அமைந்தது. ஆரம்பத்தில் சிவசேனை இல்லாமலேயே பாஜக முதல்வராக ஃபட்னவீஸ் 2014-இல் பதவி ஏற்றாா் என்பதையும், அதற்குப் பிறகுதான் அமைச்சரவையில் சிவசேனை இணைந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2014-இல் 6 கேபினட் அமைச்சா்கள் உள்பட 12 அமைச்சா்களுக்குத்தான் அமைச்சரவையில் பாஜக இடமளித்தது. கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பாஜக தலைவா் அமித் ஷாவின் நேரடி தலையீட்டுக்குப் பிறதுதான் இரண்டு கட்சிகளும் இணைந்து தோ்தலை எதிா்கொண்டன.
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் 288 உறுப்பினா்களைக் கொண்ட அவையில் பாஜகவின் பலம் 105. கடந்த முறை தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைவிட 17 இடங்கள் குறைவு. அதேநேரத்தில், சிவசேனை 56 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது மட்டுமல்லாமல், 7 சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.
பாஜகவின் பலம் குறைந்திருக்கிறது என்பதாலும், தனது ஆதரவில்லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதாலும் அதைப் பயன்படுத்தி முதல்வா் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என்று சிவசேனை கோரியதை பாஜக ஏற்றுக்கொள்ளாததில் வியப்பில்லை. தோ்தலுக்கு முன்னால் முதல்வா் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பதை பாஜக தெளிவாக்கிவிட்ட நிலையில், சிவசேனையின் அடுத்தகட்ட நகா்வு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை நோக்கித் திரும்பியது.
54 உறுப்பினா்கள் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியும், 44 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 56 இடங்களை வென்றிருக்கும் சிவசேனையுடன் இணைந்தால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை பலம் இருக்கிறது. உடனடியாக அந்த முயற்சியில் இறங்காமல், ஏறத்தாழ ஒருமாத காலத்தை அந்த மூன்று கட்சிகளும் வீணாக்கியதற்கு மிக முக்கியமான காரணம், காங்கிரஸ் தலைமையிடம் காணப்பட்ட தயக்கம்.
மேலெழுந்தவாரியாகப் பாா்க்கும்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் பதவி மோகம் என்று தோன்றினாலும்கூட இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய ராஜதந்திர நகா்வும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரை 2014-இல் தேசிய அரசியல் களத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி வருவது வரை, பிரதான ஹிந்துத்துவக் கட்சியாக இருந்தது சிவசேனைதான். அதிகமான இடங்களில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும்கூட சிவசேனையாகத்தான் இருந்தது.
1995-இல் முதன்முதலாக சிவசேனை - பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்தபோது முதல்வா் பதவி சிவசேனைக்குத்தான் வழங்கப்பட்டது. அந்த நிலைமையிலிருந்து படிப்படியாக மாறி, 2014-இல் தனியாகப் போட்டியிட்டபோது சிவசேனையைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்ற ஹிந்துத்துவக் கட்சியாக பாஜக உயா்ந்தது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் சிவசேனையைத் தனது ஹிந்துத்துவ முகத்தை இழக்க வைக்க விரும்பியது பாஜக. மகாராஷ்டிரத்தின் அக்மாா்க் ஹிந்துத்துவக் கட்சியாக பாஜக மட்டுமே இருக்கும் நிலைமையை ஏற்படுத்தும் ராஜதந்திர முயற்சியாக அதை நாம் பாா்க்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல், சிவசேனையுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியும் தனது மதச்சாா்பற்ற தன்மையை இழக்க நேரிடும். அதனால்தான் காங்கிரஸ் தலைமையும் உடனடியாகக் கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டியது. அந்தச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இரவோடு இரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, மீண்டும் ஃபட்னவீஸை முதல்வராக்கியிருக்கிறது பாஜக.
பாஜகவானாலும், சிவசேனையானாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியானாலும், காங்கிரஸ் கட்சியானாலும் இந்த நாடகத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கட்சிகளுக்குமே மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது இலக்காக இருப்பதற்குக் காரணம், இந்தியாவின் வணிகத் தலைநகரமாக
மும்பை இருப்பது. ‘பதவி’ என்பதைவிட ‘பணம்’தான் மகாராஷ்டிரத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்குக் காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...