அமெரிக்கா-ஈரான் இடைக்கால போர் நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவுக்குவரும் நிலையில், தற்போதைய சூழல் உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் அமெரிக்காவும் ஈரானும் கடைப்பிடிக்கும் பிடிவாதம், உலகை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 8-ஆம் தேதி இரு வார போர் நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஏப்ரல் 12-ஆம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
மேற்காசியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தன்வசம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்காததுதான் அதற்குக் காரணம்.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையையும், ஈரான் துறைமுகங்களையும் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்குப் பதிலடியாக, வளைகுடாவில் உள்ள எந்த ஒரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என ஈரான் எச்சரித்தது. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டாலும், அமெரிக்காவும் ஈரானும் நேரடியாகப் பேச்சுவார்த்தை
நடத்தியதே ஒரு பெரிய முன்னேற்றம்தான். இதற்கிடையே, இஸ்ரேல்-லெபனான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க ஒப்புக்கொள்வதாக ஈரான் அறிவித்தது இணக்கமான சூழல் ஏற்பட வழிகோலியது. அந்தச் சூழல் ஒருநாள்கூட நீடிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தையும் நிறுத்தியது. கடல்வழி முற்றுகை மூலம் ஈரானின் கப்பல்களுக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி மறுத்தது. சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக ஈரான் மீது மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா முயன்றதுதான் ஈரான் தனது முடிவை மாற்றிக்கொண்டதற்கான காரணம். ஹோர்முஸ் நீரிணையை எந்தக் கப்பலும் கடக்க முயலக் கூடாது; பாரசீக வளைகுடாவிலும், ஓமன் வளைகுடாவிலும் கப்பல்கள் நங்கூரமிட வேண்டும்; மீறினால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கையும் விடுத்தது.
ஹோர்முஸ் நீரிணையை துருப்புச்சீட்டாக்கி அமெரிக்காவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதுதான் ஈரானின் நோக்கம்; அது நியாயமும்கூட. எரிபொருள் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் பல நாடுகள் திணறும் சூழலில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரண்டு இந்திய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில் இந்திய மாலுமிகள் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை. ஆனால், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இருந்த 13 இந்திய கப்பல்கள் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்கு திரும்ப வேண்டி வந்தது. நீரிணையின் இருபுறமும் சுமார் 20,000 மாலுமிகளுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் நடுக்கடலில் சிக்கித் தவிக்கின்றன.
அணுசக்தித் திட்டம் உள்பட அமெரிக்காவின் நிபந்தனைகள் தொடர்பாக ஈரான் உடன்பாட்டுக்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியாது என ஈரான் தெரிவித்திருக்கிறது. இப்போது முட்டுக்கட்டை தொடர்வதற்கு மீண்டும் ஹோர்முஸ் நீரிணை முக்கியக் காரணம் ஆகியிருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இந்திய சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் நட்பு நாடான இந்தியா, புது தில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை அழைத்து அவரிடம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் மூலம் உலக நாடுகளின் தார்மிக ஆதரவை ஈரான் இழக்க நேரிடும்.
பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான வழிகளை ஆராயாமல் முட்டுக்கட்டை போடுவதிலேயே முனைப்பாக இருந்தால் அமெரிக்கா மீதான ஏற்கெனவே குறைந்துவிட்ட நம்பகத்தன்மை மேலும் குறையும். இஸ்ரேலுக்காகத்தான் இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியது.
ஆனால், ஈரானிடமிருந்து எதிர்பாராத வகையில் கிடைத்த பதில் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது. இப்போது, இது ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடி விவகாரமாக மாறியிருக்கிறது. தேவையில்லாமல் மேற்காசியாவில் மீண்டும் தலையிட்டு இப்போது ஈரான் பிரச்னையை தனது கௌரவப் பிரச்னையாக மாற்றிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அடிபணிந்து போவதைவிட, துணிந்து போராடி அழிவதற்கும் தயாராக இருக்கிறது ஈரான்.
அதிபர் டிரம்ப்புக்கு இது கௌரவப் பிரச்னை என்றால், ஈரானுக்கு தன்மானப் பிரச்னை. இதில் சிக்கித் தவிக்கிறது ஏனைய நாடுகளின் எரிவாயு என்கிற அடிப்படைப் பிரச்னை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


