மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்...

சீனாவின் நேசக்கரத்தை சந்தேகப்படுவதில் இந்தியாவுக்குச் சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

News image

சீனா, இந்தியா கொடி - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 6:00 am IST

பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சொன்ன ஒரு கருத்து, சர்வதேச அளவில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவும், அகற்றி நிறுத்தவும் முடியும். ஆனால், இரு நாட்டு உறவில் அண்டை நாடுகளை விலகிப் போகச் சொல்லவோ, நாம் விலகிப் போகவோ புவியியல் ரீதியாக இயலாது'' என்பதுதான் அந்தக் கருத்து.

பாகிஸ்தானுக்குப் பொருந்தும் அதே கருத்து சீனாவுக்கும் பொருந்தும். புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல நூற்றாண்டு தொடர்பு கொண்ட இரண்டு பழைமையான நாகரிகங்கள் இந்தியாவும், சீனாவும்.

1962 சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து இந்திய-சீன உறவு முற்றிலுமாக சிதைந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆட்சிகளில் ஓரளவுக்குத் தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனைகள் தொடங்கின. ஒருபுறம் எல்லைப் பிரச்னை விவாதப் பொருளாகத் தொடர்ந்தாலும், இன்னொரு புறம் நட்புறவுக்கான பாலம் அமைக்கப்பட்டது. இந்தியாவின் ஆதரவும், வலியுறுத்தலும்தான் ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினராக கம்யூனிஸ சீனா இடம்பெற வழிகோலியது என்பதை இப்போது சீனா மறந்து விட்டாலும் அதுதான் உண்மை.

2020 ஜூன் 5-ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து, ஓரளவுக்கு சீரடைந்து வந்த இந்திய-சீன உறவு மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பி விட்டது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலும், பல சீன செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைகளும் இந்தியச் சந்தையில் சீனப் பொருள்கள் தடையின்றி இறக்குமதியாவதைத் தடுத்துவிடவில்லை. அது மட்டுமல்ல, சீனாவில் இருந்து கிடைத்து வந்த முதலீடுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அண்மையில்தான் இந்திய அரசு சீன முதலீடுகளுக்கான சில விதிமுறைகளைத் தளர்த்தி இருக்கிறது. முற்றிலுமாகத் தடைபட்டிருந்த இரு நாட்டு உறவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் தியான்ஜீனில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் மோடி- அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எல்லையோரப் பதற்றம் கணிசமாகக் குறைந்தது; இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் எதையும் வெளிப்படுத்தாமல் சீனா அடக்கி வாசிக்கத் தொடங்கியது; இந்தியாவும் இருநாட்டு உறவை

வலுப்படுத்துவதில் அக்கறை காட்ட முனைந்தது. ஆனாலும்கூட பரஸ்பர அவநம்பிக்கை (ட்ரஸ்ட் டெஃபிசிட்) முற்றிலுமாக அகன்றதாகச் சொல்லிவிட முடியாது.

இந்தப் பின்னணியில்தான் அண்மையில் தில்லியில் நடந்த "பிரிக்ஸ் ' அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை நாம் பார்க்க வேண்டும். இந்தியாவின் சார்பில் தேசியப்

பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யும், அந்தக் கூட்டத்துக்கு முன்பு தனியாக சந்தித்து விவாதித்தனர்.

அனைத்து நிலையிலுமான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா முழுமூச்சுடன் தொடங்க வேண்டும் என்றும், எல்லா துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயும் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும் என்பதும் சீனத் தரப்பின் எதிர்பார்ப்பாக இருந்தது. எல்லைப் பிரச்னையை அகற்றி வைத்து வர்த்தகம், முதலீடு, ஊடகம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற சீனாவின் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்வதில் இந்தியா தயக்கம் காட்டுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சீனாவுக்குச் சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் சீனாவில் இருந்தான இறக்குமதி களைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. அதிகரித்த உற்பத்திக்குப் புதிய சந்தையைத் தேடவேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், எல்லைப் பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியாவுடனான இருதரப்பு உறவைப் பலப்படுத்தவும், வர்த்தகப் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் விரும்புகிறது.

சீனாவின் நேசக்கரத்தை சந்தேகப்படுவதில் இந்தியாவுக்குச் சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஒருபுறம் பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கமும், இன்னொரு புறம் வங்காள விரிகுடா மற்றும் இந்துமகா சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் முனைப்பும் நட்புறவுக்கான தடைகள். அதனால்தான் "இருநாட்டு உறவு இயல்பாக வளர வேண்டும்' என்று இந்தியா விரும்புவதாக அஜீத் தோவல் தெரிவித்திருக்கிறார்.

விநியோகச் சங்கிலி, வர்த்தகம், முதலீடு, இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகளான கனிமப் பொருள்கள், உரங்கள், "ரேர் எர்த் மெட்டல்ஸ்' எனப்படும் அரிய வகைத் தாதுக்கள் உள்ளிட்டவற்றை நாம் பெறுவதற்கு சீனாவுடனான உறவு நிச்சயமாகத் தேவை. அதற்காகவாவது "பரஸ்பர அவநம்பிக்கை' அகல வேண்டும்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ மேதையும், ராணுவ தளபதியுமான சுன் ட்ஸூ தனது "ஆர்ட் ஆஃப் த வார்' புத்தகத்தில் எழுதுவார். எப்போது சண்டை போட வேண்டும், எப்போது சண்டை போடக் கூடாது என்று தெரிந்து வைத்திருப்பவர்தான் வெற்றி பெறுவார்''. அதுதான் இப்போது இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய உத்தி!

திருக்குறள்

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.

Summary

Whether you like it or not...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.