
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் (சென்சிடிவ்) பகுதிகளாக அறிவிப்பது தொடர்பான வரைவறிக்கையை கர்நாடக பேரவையும், மேலவையும் ஒருமனதாக நிராகரித்திருக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை 2011-ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது.
1.29 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி என வரையறுத்த காட்கில் குழு, ஒட்டுமொத்த பகுதியையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
அந்தப் பகுதியை மூன்றாகப் பிரித்து பிரிவு 1 மற்றும் 2-இல் புது அணைகள் கட்டுதல், ரயில்வே திட்டங்கள், சாலைப் பணிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல் போன்றவற்றை செய்யக் கூடாது, சுரங்கப் பணிகள், பிளாஸ்டிக், ரசாயன உரங்கள் பயன்பாடு ஆகியவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் முற்றிலுமாக நீக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளை காட்கில் குழு அளித்திருந்தது.
காட்கில் குழுவின் அறிக்கை தங்களது மாநில வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறி கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, ஏன் கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியது.
அதைத் தொடர்ந்து அன்றைய மன்மோகன் சிங் அரசு காட்கில் குழுவின் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
கஸ்தூரிரங்கன் குழு தனது அறிக்கையை 2013-இல் தாக்கல் செய்தது. அந்தக் குழு 1.64 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை மேற்குத் தொடர்ச்சி மலை என வரையறுத்து அதில் 60,000 சதுர கி.மீ. பரப்பளவை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இது தொடர்பான வரைவறிக்கையை வெளியிட்டு வருகிறது.
ஆறாவது முறையாக வெளியிடப்பட்ட வரைவறிக்கை காலாவதியானதால் 7-ஆவது வரைவறிக்கை கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவறிக்கை தொடர்பாக ஆட்சேபணைகளைத் தெரிவிக்க 60 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரைவறிக்கையைத்தான் கர்நாடக அரசின் பேரவையும், மேலவையும் கடந்த செப். 22-ஆம் தேதி நிராகரித்திருக்கின்றன. தொடர்புடைய பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொள்ள ஓராண்டு அவகாசம் தேவை என்றும், அதுவரை கர்நாடகம் தொடர்புடைய பகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. கள ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தில் 123 கிராமங்களை உள்ளடக்கிய 13,108 சதுர கி.மீ. பரப்பளவை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக வரையறுக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை பரிந்துரை செய்திருந்தது. இதே விவகாரத்தில், கேரள அரசு கள ஆய்வு மேற்கொண்டு 98 கிராமங்களை உள்ளடக்கிய 8,590.69 சதுர கி.மீ. பரப்பளவை மட்டும்தான் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அதிகபட்சமாக கர்நாடகத்தில் 20,668 சதுர கி.மீ. (1,576 கிராமங்கள்), மகாராஷ்டிரத்தில் 17,340 சதுர கி.மீ. (2,159), கேரளத்தில் 13,108 சதுர கி.மீ. (123), தமிழகத்தில் 6,914 சதுர கி.மீ. (135), கோவாவில் 1,461 சதுர கி.மீ. (99), குஜராத்தில் 449 சதுர கி.மீ. (64) பரப்பளவை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளாக கஸ்தூரிரங்கன் குழு அடையாளம் கண்டது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பு இருக்காது என முந்தைய அரசு கருதியதால் வரைவறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கேரளத்தின் வயநாட்டில் கடந்த 2024 ஜூலையில் நிகழ்ந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது கருத்து தெரிவித்த மாதவ் காட்கில், "சுற்றுச்சூழல் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் பெருமுதலாளிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்துள்ளனர். தனது குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழும்" என்று எச்சரித்திருந்தார்.
நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவில் சுமார் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகள் வாடிக்கையாகிவிட்டன.
இந்தப் பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என்று அறிவிக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும், கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தொழில் பாதிக்கப்படும், தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என்று உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் அஞ்சி நடவடிக்கை எடுக்காமல் போனால் மிகப் பெரும் பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.
காட்கில், கஸ்தூரிரங்கன் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளூர் மக்களுக்கும் ஒட்டுமொத்த எதிர்கால சந்ததிகளுக்கும் பயன் அளிப்பதாக அமையும் என்பதையும் புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை...!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாத
வனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
திருக்குறள் (எண் 435) அதிகாரம்: குற்றம் கடிதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆலோசனை

மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் மண்டலம்: 8,590 சதுர கி.மீ.-ஆக குறைக்க கோரப்படும் - கேரள முதல்வா் வி.டி.சதீசன்




