கவிஞர் நா.முத்துக்குமாரின் மரண செய்தி உண்மையில் breaking news ஆகத் தான் வந்தது. ‘அணிலாடும் முன்றிலை’ நேசித்து வாசித்த ரசிகை நான். நாற்பது வயசெல்லாம் சாகிற வயசா என்று வந்த அனைவரும் கையறு நிலையில் உழல, அந்த உன்னதக் கலைஞனை காமாலைக்கு காவு கொடுத்து விட்டோமே என்று என் மருத்துவ மனசும் ஆற்றாமை கொண்டது.
‘தமிழ் இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒரு வார்த்தை; தயது செய்து தமிழுக்காக உங்கள் உடலை காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்காக உங்கள் உடலை காப்பாற்றிக் கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் வகுத்த ஒழுக்கம், நெறி என்பது நம்முடைய உடலையும், ஆயுளையும் நீட்டிக்கும் தவம். அந்த தவத்தில் நீங்கள்ட ஈடுபட வேண்டும். தமிழ் படைப்பாளர்கள் தங்கள் உடலை ஒம்புதல் வேண்டும்’ என்று கவிஞர் வைரமுத்து கூறிய வார்த்தைகள் தமிழ் படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தும் எல்லா இளைஞர்களுக்கும் கொடுத்த ஒரு wake up call.
இன்றைய இளைஞர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். கடும் உழைப்பாளிகள். தேர்ந்த படைப்பாளிகள் ஆனால் பாலில் துளி விஷம் போல வாழ்க்கை முறையில் சில புதிய தரவுகள். அந்த தரவுகள் தரும் அதிரடி முடிவுகள் தான் இந்த இளைய மரணங்கள்.
ஈரல் ஒரு உயிர் மேடை!
நம் உடலில் தினசரி பல நூறு வளர்சிதை மாற்றங்கள் (Metabolic Changes) ஒரு பிரம்மாண்ட ஆர்க்கெஸ்ட்ரா போல நித்தமும் நிகழ்கின்றன. அதை நடத்திக் கொடுக்கும் உயிர் மேடைதான் நம் கல்லீரல். பித்த நீர் சுரப்பு, சர்க்கரை சத்தை சேமித்தல், உடலுக்கு தேவையான போது அதை மாற்றித் தருதல், கொழுப்பு செரிமானம், ஹார்மோன் உற்பத்தி, கழிவுகளை உடைத்துக் களைதல், கிருமிகளை கொல்லல், மருந்துகளை கிரகித்தல் போன்ற பல ஆயிரம் வேலைகளை ஆர்பாட்டம் இல்லாமல் செய்யும் உறுப்பு ஈரல்தான். எனவே தான் ஒரு இயக்கம் சீர்கேடடைந்தால் அதன் ஈரல் கெட்டு விட்டதாக பேச்சு வழக்கில் கூறுவோம். இந்த அடிப்படையில் தான் பல நோய் நிலைகளிலும் ஈரல் தேற்றி மருந்துகளைக் கொடுத்து நோய்களை அணுகி பிணியறுப்பது சித்த மருத்துவர்களின் யுக்தியாகும்.
கல்லீரல் சிதைவின் காரணங்கள்:
கல்லீரல் சிதைவு ( Liver Fibrosis) நோய் இன்று பரவலாகிக் கொண்டிருக்கும் ஒரு நாட்பட்ட நோய் நிலையாகும் (Chronic Liver Disease) Alcoholic liver disease, Non alcoholic fatty liver disease, Hepatitis ஆகியவை மருத்துவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பொதுவான ஈரல் பிணிகளாகும். அதிகரித்துக் கொண்டே செல்லும் இதன் சதவிகிதம் தான் தற்போது கவலைக் கொள்ளவைக்கிறது.
1. குடியினால் ஏற்படும் கல்லீரல் சிதைவு (Alcoholic Cirrhosis)
2. வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் சிதைவு (Viral Hepatitis B,C)
3. மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் சிதைவு (Drug Induced Fibrosis )
4. பித்த நாள தாபிதம், அடைப்பினால் ஏற்படும் கல்லீரல் சிதைவு (Biliary Cirrhosis)
5. காரணம் அறியப்படாத கல்லீரல் சிதைவு (Cryptogenic Cirrhosis)
இப்படி ஈரல் குலையை குலைத்துப் போட பல காரணங்கள் இருந்தாலும் ஈரல் கடும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு தன் தினசரி வேலைகளை செய்து கொண்டே வரும். பல சிரமங்களை தாங்கிக் கொண்டு குடும்பப் பொறுப்புகளை திறம் பட செய்யும் நம் தாய் போன்று அலட்டிக் கொள்ளாமல் அட்ஜஸ்ட் செய்யும் பொறுப்பான உறுப்பு நம் கல்லீரல், எனவே மேற்கண்ட நோய் நிலைகளில் ஆரம்ப கட்டத்தில் குறிகுணங்களை வெளிக்காட்டாது. பெரும்பாலும் பசியின்மை, சோர்வு, உடல் எடை குறைதல், மெலிவு, இரத்த சோகை என்றே இதன் ஆரம்ப குறிகுணங்கள் வெளியாகும். ஒரு கட்டத்தில் பெரிய அளவில் சிதைவடைந்த பின்னர்தான் படபடப்பு, குமட்டல், காமாலை, பெருவயிறு, முகம் கறுத்தல் போன்ற குறிகுணங்கள் தோன்றும் 90% பேர் மருத்துவர்களை நோக்கி வருவது decompensated நிலையில் தான். ஆனால் அதற்குள் காலம் கடந்து போகும்; காலன் கடத்திப் போவான்; இதுவும் கடந்து போகும் என்று நாமும் கடந்து போவோம்.
தன்னை சிதைக்கும் பல்வேறு பாதிப்புகளிலும் மெல்ல சிதைந்து கடைசியில் மெல்லக் கொல்லும் கல்லீரல், சடுதியில் கொல்லும் மாரடைப்பிற்கு பயப்படும் நாம் மெல்லச் சிதைந்து, உடலை, மெல்லச் சிதைக்கும் ஈரலைக் கண்டு கொள்ளவதில்லை. அதற்குரிய முக்கியததுவத்தையும் கொடுப்பதில்லை. உண்மையில் சொன்னால் தலைமை செயலகமான மூளை, ரத்த இயந்திரமான இதயம், சுவாசம் தரும் நுரையீரல், கழிவு நீக்கும் சிறுநீரகத்திற்குக் சற்றும் சளைத்ததல்ல நம் கல்லீரல், நாளொன்றுக்கு சராசரியாக 15,000 செயல்களை செய்யும் seat of metobolism நம் கல்லீரல் தான். எனவேதான் பித்த நாடிக்கு சித்த மருத்துவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். ‘பித்தம் அடங்கிடின் பேசாதே போய்விடு’ என்பது சித்த மருத்துவம் கூறும் தீராப்பிணி நிலை; சாப்பிணி மருந்தேற்காத நிலை. எப்படி ஆர்பாட்டமில்லாமல் வேலை செய்பவனை சமூகம் கண்டுக்கொள்வதில்லையோ அப்படித்தான் ஈரல் பற்றிய நமது மனநிலையும். இந்த அறியாமையால்தான் ஈரலைத் சேதப்படுத்தும் பல அராஜகங்களை நாம் சர்வசதாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்கிறோம்.
ஈரலின் முதல் எதிரி குடி. குடி குடியைக் கெடுக்கும், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் வெறும் சம்பிரதாய வாக்கியங்களாகிவிட்டன. போதைக்கு அடிமையான பெரும் கூட்டமாக தமிழ் சமூகம் மாறி வருவது யாவரும் அறிந்த அக்கிரமம். குடியினால் குதூகலம் கிடைப்பதாக நம்பியே பலர் குடிக்கத் தொடங்குகிறார்கள். அப்படித்தான் ‘மது’ அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘சும்மா social drinking தான், குடிக்கவில்லை என்றால் பாஸ் தப்பா நினைச்சுப்பார்’, நண்பர்கள் கோபித்துக் கொள்வார்கள். போன்ற அல்ப விஷயங்களால் உந்தப்பட்டு குடி ஆரம்பிக்கும் பலர் பின்னர் மொடா குடியர்களாக மாறிவிடுகிறார்கள். மது என்பது ‘தீ’யை போன்றது. பெரிய தீ, சிறிய தீ என்றெல்லாம் வித்தியாசமே கிடையாது. எனவே பாரபட்சம் பார்க்காமல் மது விஷயத்தில் கண்டிப்பு காட்டுவதில் தவறில்லை. நாட்டில் மது விலக்கு கொண்டு வருவது ஒரு புறமிருக்க முதலில் வீட்டில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள். மிக மிக எளிதாக கல்லீரல் சிதைவை தடுக்ககூடிய தவிர்க்ககூடிய வழி இதுதான். அளவிற்கு அதிகமான மருந்துகளையும், தேவையற்ற மருந்துகளையும் சுயமருத்துவத்தையும் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு திரண்ட உணவுகளை கண் மண் தெரியாமல் உண்பதும் செயற்கை உணவுகளை உண்பதும் ஈரலை குலைக்கும் பிரதான காரணங்களாகும்.ஆதலினால் ஈரல் பேணுவோம்!
1. ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துக் கொள்வது எந்த நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் கல்லீரல் சிதைவும் அதற்கு விதிவிலக்கல்ல. இரத்த சோகை, பசியின்மை, செரிமானமின்மை ஆகியன இருந்தால் கண்டிப்பாக ஈரலுக்குரிய பரிசோதனைகளை செய்துக் கொள்ளுங்கள். Complete blood count, liver function test, whole abdomen ultra sound scan ஆகியன எளிமையான வருடாந்திர ஈரல் பரிசோதனைகள் ஆகும்.Hepatitis B, C பரிசோதனை செய்து கொள்வதும், Hepatitis B தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதும் சிறந்தது. ஊசிகளைப் போட்டுக் கொள்ளும் போதும், வழமையாக ரத்த தானம் செய்வோரும் disposoble ஊசிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருத்தல் நலம்
2. நோய் வந்த பின் கணிப்பது அறிவு என்றால் நோய் வராமல் தடுப்பது பேரறிவு ஆகும். அந்த வகையில் நம் தமிழ் மண்ணில் விளையும் கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி ஆகிய கீரைகள் ஈரலுக்கு பாதுகாப்பு கவசமாக இயற்கையால் வழங்கப்பட்ட கொடையாகும். இவற்றை உணவாகவும், சித்த மருத்துவரின் வழிகாட்டலில் மருந்தாகவும் உட்கொள்வது நம் ஈரலுக்கு செய்யும் மிகப் பெரிய பாதுகாப்பாகும்.
4. மாதுளம் பழம் ஈரல் திசுக்களின் கழிவுகளை நீக்கி புதிய உயிர்ப்பான ஈரல் திசுக்களை உருவாக்கும்.
5. சுண்டைக்காய் குடல், ஈரலில் தேங்கிய நச்சுக் கிருமிகளையும், கழிவுகளைக் நீக்கும்.
6. புகைப்பதாலும், மது அருந்துவதாலும் ஈரலில் படியும் நஞ்சுகளை அகத்திக்கீரை நீக்கும்.
7. தனியா குடிநீர் மதுவெறியைத் தணிக்கும்.
8. கீழாநெல்லி கரிசலாங்கண்ணி, மஞ்சள் காமாலையை போக்கும்.
9. நெருஞ்சில் மிதமிஞ்சிய பித்த நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும்.
10 நெல்லிக்காய் குருதியை வளப்படுத்தும்.

இப்படி தமிழ் மருத்துவம் அளித்து சென்ற அளவற்ற பொக்கிஷங்களை திறந்து பயன்படுத்தாமல் காமாலைக்கு காவுகள் கொடுத்துவிட்டு புலம்பல் திலகங்களாக நாம் திரிவது ஏன்? இணைந்து விரட்டுவோம்! புதிய தரவுகளோடு பாரம்பரிய மரபுகளை இணைத்தால் பல சிக்கலான நோய்களுக்கு விடை கொடுக்கலாம். நவீன மருத்துவத்தையும் நம் சித்த மருத்துவத்தையும் இணைத்தால் பல நோய்களை அடியோடு விரட்டலாம். காமாலைக்கு மட்டுமல்ல பல மரண பூமாலைகளுக்கும் தேவை இராது.
காலம் கடந்து போகும் முன் காலத்தை வென்ற நம் சித்த மருத்துவத்தை நவீன பார்வையில் முன்னெடுத்துச் சென்றால் எந்த இன்னுயிரையும் நாம் அநியாயமாக அறியாமையால் இழக்க வேண்டாம். ‘ நுகர்பவற்றை நெறிபடுத்திக் கொண்டால் ஆனந்த யாழாகும் நம் வாழ்க்கை!
- டாக்டர் .க.வே.அபிராமி B.S.M.S
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

பயிா்கடன் தள்ளுபடி: கந்தா்வகோட்டை விவசாயிகள் அதிருப்தி

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



