சத்தீஸ்கர் சி.டி.விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜேஷ் மூனத் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஆபாச குறுந்தகடு (சி.டி.) விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை
Updated on
1 min read

சத்தீஸ்கரில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜேஷ் மூனத் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஆபாச குறுந்தகடு (சி.டி.) விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜேஷ் மூனத்தின் ஆபாச விடியோ காட்சி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஒரு சி.டி. அண்மையில் வெளியாகி சத்தீஸ்கர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தில்லியை அடுத்த காஜியாபாதைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மாவை சத்தீஸ்கர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது ராய்ப்பூர் சிறையில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆபாச சி.டி. தன்னிடம் இருப்பதாகவும், இதனால் அதிருப்தியடைந்த போலீஸார் தன்னைக் கைது செய்து விட்டதாகவும் அவர் ஏற்கெனவே கூறினார்.
எனினும், அந்த சி.டி. போலியானது என்று அமைச்சர் ராஜேஷ் மூனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பி.எல்.பூனியா, ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சிபிஐ அமைப்பானது, மத்திய பாஜக அரசின் கைப்பாவை போல் செயல்படுகிறது. எனவே, சி.டி.விவகாரத்தில் சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே ஆபாச குறுந்தகடு (சி.டி.) விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
அந்த சி.டி.யை நாங்கள்தான் விநியோகம் செய்வதாக பாஜக கூறும் குற்றச்சாட்டு தவறானது. காங்கிரஸ் கட்சி எப்போதும் அதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதில்லை. 
அந்த சி.டி.யானது ஏற்கெனவே வெளியாகி மக்களின் பார்வையில் உள்ளது. எனினும், ஆளும் கட்சி அமைச்சர்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் அம்பலப்படுத்துவது எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமையாகும். அது எங்கள் தார்மிகக் கடமை.
இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com