/

மும்பை - ஆமதாபாத் ரயில்களால் நஷ்டம்?:மேற்கு மண்டல ரயில்வே மறுப்பு

மும்பை - ஆமதபாத் இடையே செல்லும் ரயில்களில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்புவதாகவும், இதனால் அந்த நகரங்களுக்கிடையே அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயிலுக்குப் போதிய வரவேற்பு இருக்காது

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:46 pm

DIN

மும்பை - ஆமதபாத் இடையே செல்லும் ரயில்களில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்புவதாகவும், இதனால் அந்த நகரங்களுக்கிடையே அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயிலுக்குப் போதிய வரவேற்பு இருக்காது என்றும் வெளியான தகவலை மேற்கு மண்டல ரயில்வே மறுத்துள்ளது.
மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகள் செல்வதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையில் தனக்குத் தகவல் கிடைத்ததாக மும்பையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் அனில் கல்கலி என்பவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகத்துக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் ரூ.29 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
மும்பை - ஆமதாபாத் இடையே இயக்கப்படும் சாதாரண விரைவு ரயில்களே 60 சதவீதம் காலியாக இயங்கும் நிலையில், அந்த நகரங்களுக்கிடையே அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில்களாலும் வர்த்தக ரீதியில் இழப்பே ஏற்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கு மண்டல ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மும்பைக்கும், ஆமதாபாதுக்கும் இடையே இயக்கப்படும் ரயில்களில் 40 சதவீத இருக்கைகளில் மட்டுமே நிரம்புவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அந்தத் தகவல், ஆர்டிஐ விசாரணையில் கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விக்காக அளிக்கப்பட்ட பதிலேயாகும். மும்பையிலிருந்து ஆமதாபாதுக்கும், ஆமதாபாதிலிருந்து மும்பைக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமே அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட ரயில் நிலையங்களில் ஏறி இறங்கும் பயணிகளின் எண்ணிக்கை அதில் சேர்க்கப்படவில்லை.
உண்மையில், இரு நகரங்களுக்கும் இடையே செல்லும் ரயில்களில் 100 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
ஆர்டிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ள கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாகவே பயணிகள் பயணித்தனர். 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இயக்கப்பட்ட 34 ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கையைவிட 24.72 சதவீதம் அதிக பயணிகள் பயணித்தனர்.
எனவே, அந்தக் காலகட்டத்தில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பியிருந்ததாகவும், அதனால் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மும்பைக்கும், ஆமதாபாதுக்கும் இடையே ஜூலை மாதம் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் மேற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.233 கோடி லாபம் கிடைத்ததாக அந்த மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பகார் தெரிவித்தார்.
இதனை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் தனது சுட்டுரை (டுவிட்டர்) வலைதளப் பதிவின் மூலம் உறுதி செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.