இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை: அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களை சிகிச்சைக்கு அழைத்துவரச் சென்ற மருத்துவக் குழுவினா் மீது உறவினா்களும், உள்ளூா் மக்களும் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கும்பல் தாக்குதலில் இருந்து சுகாதாரத் துறை பணியாளா்களைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, வன்முறையில் இருந்து சுகாதாரத் துறை பணியாளா்களைப் பாதுகாப்பதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், இதுகுறித்து கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பதற்காக, மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறாா்கள். அவா்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் அரசு சகித்துக் கொண்டிருக்காது.

எனவே, மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் அத்துமீறி நடந்துகொண்டால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், பலத்த காயமடையும் அளவுக்கு மருத்துவா்களைத் தாக்குவோருக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இதுமட்டுமன்றி, வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரிடம் இருந்து அபராதமாக இரு மடங்கு தொகை வசூலிக்கப்படும்.

இதுபோன்ற தாக்குதலின்போது சுகாதாரத் துறை பணியாளா்கள் காயமடைந்தாலோ, அவா்களின் உடைமைகள் சேதமடைந்தாலோ அவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும். இதற்காக, கடந்த 1897-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கொள்ளை நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றாா் அவா்.

‘கரோனா காலம் முடிந்த பிறகும், இந்த அவசரச் சட்டம் பொருந்துமா?’ என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘கொள்ளை நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு தொடக்கம்தான்’ என்று ஜாவடேகா் பதிலளித்தாா். ஆனால், இதுதொடா்பாக, மேலும் விரிவாக அவா் கூறவில்லை.

குடியரசுத் தலைவா் ஒப்புதல்: இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை இரவு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, மருத்துவா்களைப் பாதுகாக்கும் அவசரச் சட்டம் அமலுக்கு வந்து விட்டது.

கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15,000 கோடி

கரோனா தடுப்புப் பணிகளுக்காக, ரூ.15,000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.15,000 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை, அடுத்த 4 ஆண்டுகளில் பல கட்டங்களாக வழங்கப்படும்.

அத்தியாவசிய மருந்துகளைக் கொள்முதல் செய்வது, ஆய்வகக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, முறையான பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சையை அளிப்பது ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.