/

பிரதமர் மோடியுடன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இந்தியாவுடன் உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ள பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

News image

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த  பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்.

Updated On :16 டிசம்பர் 2020, 11:25 pm


புது தில்லி,: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் அடிப்படையில், இந்தியாவுடன் உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ள பிரிட்டன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக புது தில்லி வந்துள்ள அவர், செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் புதன்கிழமை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.  
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில், "கரோனா பாதிப்புக்கு பிந்தைய நிலை குறித்தும் பிரக்ஸிட்டுக்கு பிந்தைய உலக நிலை குறித்தும் அதில் இந்தியா- பிரிட்டனின் கூட்டு பங்களிப்பு குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராபுடன் விவாதிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: 
கரோனா பாதிப்புக்கு பிந்தைய உலகில், இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இருதரப்பு உறவில் வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, இடம் பெயர்ந்தவர்கள் நலன், கல்வி, எரிசக்தி, பருவநிலை மாற்றம், தொலைதொடர்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய, விரிவான திட்டத்தை வகுக்க பிரிட்டனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வாழ்த்தை பிரதமர் மோடிக்கு தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரிட்டன் சமீபத்தில் நடத்திய பருவநிலை இலக்கு குறித்த மாநாட்டில் பங்கேற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். எல்லாவற்றையும்விட பொதுவான உலகளாவிய சவால்களில் ஒன்றாக எதிர்கொள்ளும் திறன் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுக்கு மேலும் முன்னுரிமை கொடுக்க பிரிட்டன் தயார் எனவும் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமரிடம் தெரிவித்தார். 
2021-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைமையில் நடைபெறும் ஜி-7 கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு விடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுப்பிய கடிதத்தையும் பிரதமரிடம் டொமினிக் ராப் வழங்கினார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், அவருக்கு நன்றி தெரிவித்தார். 
தடுப்பூசி மையம் அமைக்க ஒப்புதல்: கரோனா உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான தடுப்பூசி மெய்நிகர்  மையத்தை அமைக்க இந்தியா- பிரிட்டன் ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த மையத்தில் இரு நாட்டு நிபுணர்கள் ஒன்றிணைந்து கரோனா உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.