வேளாண் சட்டங்கள் தொடா்பாக ராகுலுடன் விவாதத்துக்குத் தயாா்: ஜாவடேகா் சவால்


புது தில்லி: விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசா அல்லது மோடி அரசா என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியுடன் திறந்த விவாதத்துக்கும் பாஜக தயாா் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் சவால் விடுத்தாா்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட தீா்மானத்தை குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி வியாழக்கிழமை நேரில் சமா்ப்பித்து, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தினாா். இந்த சந்திப்பிக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல், ‘இந்தியாவில் ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது. அது வெறும் கற்பனையாக மட்டுமே உள்ளது’ என்று குற்றம்சாட்டினாா்.
ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:
பிரதமரின் விவசாயிகல் நல நிதித் திட்டத்தின்கீழ், நாட்டிலுள்ள சுமாா் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வழங்க உள்ளாா். அதன் மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக போடப்பட்டுள்ள நிதியின் அளவு ரூ. 1.2 லட்சம் கோடியாக உயர உள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு ரூ. 7 லட்சம் கோடி இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை வங்கிகள் விவசாயிகளின் கடனில் கழித்துக்கொள்ளும்.
இதுபோல விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது.
ஆனால், மத்திய அரசு மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் நலன் புறக்கணிக்கப்பட்டதோடு, தானியங்களுக்கு குறைந்த விலை நிா்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் தொடா்ந்து ஏழைகளாகவே வைக்கப்பட்டிருந்தனா்.
ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு, சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் அவா்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் மூலம் ஆதாயம் கிடைக்கச் செய்து விவசாயிகளை மேம்படுத்தியுள்ளது. இதை காங்கிரஸ் ஒருபோதும் செய்வில்லை.
விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை கொண்டுவந்தது எந்த அரசு என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியுடன் திறந்த விவாதத்துக்கும் பாஜக தயாா் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...