சென்னையில் வீடுகளின் விலை வீழ்ச்சி

நாட்டில் சென்னை உள்பட 6 நகரங்களில் கடந்த காலாண்டில் வீடுகளின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், வீடுகளின் விற்பனை 3.5 மடங்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வீடுகளின் விலை வீழ்ச்சி
சென்னையில் வீடுகளின் விலை வீழ்ச்சி
Published on
Updated on
2 min read

புது தில்லி: நாட்டில் சென்னை உள்பட 6 நகரங்களில் கடந்த காலாண்டில் வீடுகளின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், வீடுகளின் விற்பனை 3.5 மடங்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நாட்டின் குறிப்பிட்ட ஆறு நகரங்களில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வீடுகளின் சராசரி விலையில் 2 - 7 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் வீடுகளின் விலை 7 சதவீதம் குறைந்துள்ளது.

முந்தைய காலாண்டில் புதிதாக வீடு வாங்குவோரின் தேவை குறைந்ததால், இரண்டாவது காலாண்டில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டதாக நைட் ஃபிராங்க் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தலா 3% மற்றும் 4% என ஜூலை - செப்டம்பர் 2020 காலத்தில் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் உயர்வு கண்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் விலையில் சராசரியாக 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவே தில்லி - என்சிஆர் மற்றும் புணேவில் 5 சதவீதமாக உள்ளது.

கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் தலா 3 சதவீத வீழ்ச்சியும், மும்பையில் இது 2 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் 6 நகரங்களில் வீடுகளின் விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவிலேயே ஹைதராபாத் மற்றும் பெங்களூரு மட்டுமே வீடுகளின் விலை உயர்வைக் கண்ட நகரங்களாக உள்ளன என்று நைட் ஃபிராங்க் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ற வகையில், ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நாடு முழுவதும் வீடுகளின் விற்பனை 33,403 ஆகவும் உயர்ந்துள்ளது. இது 2020- முதல் காலாண்டில் நடந்த 9,632 வீடுகளின் விற்பனையைக் காட்டிலும் 3.5 மடங்கு அதிகமாகும்.

விலை குறைந்தாலும், வீடுகளின் விற்பனையில் இரண்டாவது காலாண்டு, குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளை விற்று உடனடியாக அதைப் பணமாக மாற்றும் நடவடிக்கையில் கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதும், விற்பனையாகாத வீடுகளின் விலை குறைந்ததை உடனடியாக பயன்படுத்திக் கொண்ட நுகர்வோருமே இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் புணேவில், மாநில அரசு பதிவுக் கட்டணத்தைக் குறைத்திருப்பதும், அதிக வீடுகள் விற்பனையாகக் காரணமாக அமைந்துள்ளது.

வரும் பண்டிகைக் காலம் என்பது, கட்டுமான நிறுவனங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதங்களில் நடந்த விற்பனையை விடவும், கடந்த காலாண்டில் அதிக விற்பனை நடக்கக் காரணம், கட்டுமான நிறுவனங்கள் அறிவித்த சலுகைகள், தள்ளுபடி விலை மற்றும் எளிதாக பணத்தை செலுத்தும் வசதிகளும் ஒரு காரணியாக அமைந்துள்ளன.

வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டிருப்பதும், ஏராளமானோர் புதிய வீடுகளை வாங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 

வீடு கட்டுமானத் தொழில், இயல்பு நிலையை நெருங்க இன்னும் சிறிது தொலைவு இருந்தாலும், மூன்றாவது காலாண்டில் நிச்சயம் கட்டுமானத் துறை புதிய முன்னேற்றங்களைக் காணும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவே பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com