கல்வித் துறையில் பெண்களின் சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகம்: பிரதமர் மோடி

கல்வித் துறையில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


கல்வித் துறையில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது என்றும் ராஜர்ஷி நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மற்றும் எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலட்சியம் மற்றும் உறுதிகளை இந்தப் பல்கலைக்கழகம் நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்த பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தலைசிறந்தவர்களைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்துமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிவைப் பயன்படுத்த பல்வேறு  வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கையை ஒரு பெரிய பல்கலைக்கழகம் என்று அவர் குறிப்பிட்டார்.

வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது என்னும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் கோரூரு ராமசாமி ஐயங்கார் அவர்களின் வார்த்தைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்வி முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

உயர்கல்வியின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றுவதற்கும், நமது இளைஞர்களை போட்டித் திறன் மிக்கவர்களாக ஆக்குவதற்கும் அதிக எண்ணிக்கையிலும், சிறப்பான முறையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் சராசரியாக ஒரு வருடத்துக்கு ஒரு ஐஐடி திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள தார்வாடிலும் ஒரு ஐஐடி செயல்படுகிறது என்று கூறிய பிரதமர், 2014-இல் இந்தியாவில் வெறும் 9 ஐஐடிக்களே இருந்தன. அதைத் தொடர்ந்து வந்த ஐந்து வருடங்களில் 16 ஐஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்தாறு வருடங்களில் 7 புதிய ஐஐஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு முன்பு இந்தியாவில் வெறும் 13 ஐஐஎம்களே இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த ஆறு தசாப்தங்களாக வெறும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே நாட்டில் சேவைகளை வழங்கி வந்தன. 2014க்குப் பிறகு எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன அல்லது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 5-6 வருடங்களில் உயர்கல்வித் துறையில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுவது தொடர்பானது மட்டுமே அல்ல என்றும் இந்த நிறுவனங்களில் பாலின மற்றும் சமூக பங்கு பெறுதலுக்கான சீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிய பிரதமர், இத்தகைய நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

நாட்டின் கல்வித் துறையில் அனைத்து மட்டங்களிலும், பெண் குழந்தைகளின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com