/

3 மாவட்டங்களில் வார விடுமுறையில் கடற்கரை மூடல்: கரோனா பரவலால் அரசு நடவடிக்கை

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களில் வார விடுமுறை நாள்களில் கடற்கரைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 9:42 pm

DIN

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களில் வார விடுமுறை நாள்களில் கடற்கரைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சனி, ஞாயிறு, அனைத்து அரசு விடுமுறை நாள்களிலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளும் மூடப்படும். ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்தத் தடை காரணமாக, வார இறுதி நாள்களில் கடற்கரையில் பொதுமக்கள் கூட முடியாது.

இரவு 10 மணி வரையில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி: அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரையிலோ பொது மக்கள் வழிபாட்டுக்காக அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும், திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

புதிய திரைப்படங்கள்: புதிய திரைப்படங்களை அனுமதிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சியை முதல் ஏழு நாள்களுக்கு மட்டுமே திரையிட வேண்டும். அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அமலுக்கு வந்தன: கரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் சனிக்கிழமை (ஏப். 10) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த கட்டுப்பாடுகளில் கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்ற கட்டுப்பாட்டில் மட்டுமே சிறிது தளா்வு அளிக்கப்பட்டு இரவு 10 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தை ஒட்டி, தொழுகை நடத்த வசதியாக வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டுமென பல்வேறு இஸ்லாமிய தலைவா்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.