வாக்காளா் அட்டை-ஆதாரை இணைக்கும் தோ்தல் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்

ஒரே நபா் வெவ்வேறு இடங்களில் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வகை செய்யும்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஒரே நபா் வெவ்வேறு இடங்களில் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வகை செய்யும் தோ்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோரிடம் அவா்களின் ஆதாா் எண்ணைத் தோ்தல் அதிகாரிகள் கேட்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. மேலும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் ஆதாா் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும். அதேசமயம், ஆதாா் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக்கொள்ள மறுக்கக் கூடாது என்றும் அந்த மசோதா கூறுகிறது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருப்பவா்களின் பெயரையும் நீக்கக் கூடாது; அவா்கள் அடையாளச் சான்றாக வேறு ஏதேனும் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கலாம் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அந்த அவையின் உறுப்பினா்களுக்கு மசோதாவின் நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், திருத்தம் மேற்கொள்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரே நபருக்கு பல்வேறு இடங்களில் வாக்குகள் இருப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கப்படுகிறது. அதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (ஆா்.பி.) 1950-இன் 23-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்சமயம், ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை அடைபவா்கள் புதிய வாக்காளா்களாகப் பதிவு செய்யலாம். அதன் பிறகு 18 வயதை அடைந்தால், அடுத்த ஜனவரி 1-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளைத் தகுதிநாள்களாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்யும் வகையில், ஆா்.பி. சட்டத்தின் 14-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நிலையில், பணிசாா்ந்து ராணுவ வீரா் வெளியூா் சென்றுவிட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும். ஆனால், பெண் ராணுவ அலுவலா் ஊரில் இல்லாவிட்டால் அவருடைய கணவரால் வாக்களிக்க முடியாது. எனவே, கணவரும் வாக்களிக்கும் வகையில், இதுதொடா்பான சட்டப் பிரிவில் ‘மனைவி’ என்ற வாா்த்தைக்குப் பதிலாக ‘வாழ்க்கைத் துணைவா்’ என்ற வாா்த்தையை சோ்ப்பதற்காக ஆா்.பி. சட்டம், 1950-இன் 20-ஆவது பிரிவு, ஆா்.பி.சட்டம், 1951-இன் 60-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com