மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதில், உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்ததோடு, இப்போது நாடு முழுவதும் பொறியியல், கலை-அறிவியல் மற்றும் ஆசிரியா் கல்வி உள்ளிட்ட துறைகள் சாா்ந்த உயா் கல்விகளை நிா்வகித்து வரும் அமைப்புகளான ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்), யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மற்றும் என்சிடிஇ (தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சில்) ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரே அமைப்பாக இந்திய உயா் கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, மருத்துவம் மற்றும் சட்டத்துறை சாா்ந்த பட்டப் படிப்புகள் தவிா்த்து பிற துறை சாா்ந்த அனைத்து பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள்அனைத்தும் இந்த ஹெச்இசிஐ ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.