பரபரப்பான அரசியல் சூழல்; உத்தரப் பிரதேச அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்?

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதி ரீதியான பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப், குஜராத், கர்நாடகா, உத்தரக்கண்ட் மாநிலங்களில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவந்த நிலையில், இந்த வரிசையில் உத்தரப் பிரதேசம் சேரவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு முதல் ஏழு புது முகங்கள் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அவர்கள் பொறுப்பேற்று கொள்ளவுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதி, சமூக ரீதியான பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. பிராமணர் சமூகத்தை சேர்ந்த இவர், ராகுல் காந்திக்கு நெருக்கமாக கருதப்பட்டவர்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தன்னுடைய சொந்த தாக்கூர் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும் இதன் காரணமாக பிராமண சமுதாய மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, பிரசாதாவுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் பிராமணர்களை பாஜக திருப்திப்படுத்த முயற்சிக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேச மக்கள் தொகையில், பிராமணர்கள் 13 சதவிகிதமாக உள்ளனர். மிகவும் செல்வாக்கு மிக்க சமுகமான இவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை காலப்போக்கில் பாஜகவுக்கு அளிக்க தொடங்கினர். தற்போது, பாஜகவின் முக்கிய வாக்குவங்கியாக இவர்கள் கருதப்படுகின்றனர். 

அதேபோல், நிஷாத் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிஷாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என ஒரு சாரர் கூறுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. எனவே, பாஜக மீது நிஷாத் கட்சி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஓபிசி பிரிவில் நிஷாத் சமூகம் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை பெற்ற சமூகமாக திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com