சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

எட்டாவது சர்வதேச யோகா தினம் உலக அளவில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
Published on
Updated on
1 min read

எட்டாவது சர்வதேச யோகா தினம் உலக அளவில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
இந்தியாவில் நாடாளுமன்ற வளாகம், அரங்குகள், பிரபல சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்களின் அருகே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மும்பை மரைன் டிரைவ் பகுதியில் மழை குறுக்கிட்டபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரிகளுடன் அமர்ந்து யோகா செய்தார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் மோடி ஏறத்தாழ 15,000 பேருடன் யோகா செய்தார். 
குஜராத்தின் கெவாடியா பகுதியில் அமைந்துள்ள "ஒற்றுமையின் சிலை' என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் சிலை அருகே மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா யோகப் பயிற்சியில் ஈடுபட்டார். 
புது தில்லி தியாகராஜா அரங்கில் அந்த மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், ஜந்தர் மந்தரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் யோகாசனப் பயிற்சி செய்தனர். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய இணையமைச்சர் கபில் பாட்டீல் ஆகியோர் ஸ்ரீநகரில் டால் ஏரி அருகே யோகா தினத்தைக் கொண்டாடினர்.
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஜெய்பூர் ஆளுநர் மாளிகையில், அதிகாரிகளுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். நாகாலாந்தில் மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர், அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பள்ளி-கல்லூரி மாணவர்களுடன் யோகா செய்தார். 
பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒருவார காலமாக யோகா தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நீஸ்டன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியுடன் விழா நிறைவுக்கு வந்தது. இதில் பிரிட்டனுக்கான இந்திய தூதர் பங்கேற்றார். இதேபோல சீன தலைநகர் பெய்ஜிங், அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களிலும் இந்திய தூதரகங்கள் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

மனித சமுதாயத்துக்கு  இந்தியாவின் கொடை யோகா: குடியரசுத் தலைவர்

‘யோகா மனித சமுதாயத்திற்கு இந்தியா வழங்கிய கொடை’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கான சா்வதேச யோகா தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவா் மாளிகையில் அவரது குடும்பத்தினா் மற்றும் அதிகாரிகளுடன் அவா் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டாா்.

யோகா தினம் குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் வாழ்த்துச் செய்தியில், ‘‘அனைவருக்கும் சா்வதேச யோகா தின வாழ்த்துகள். யோகா, இந்தியாவின் மகத்தான பாரம்பரியங்களில் ஒன்றாகும். யோகா மனித சமுதாயத்திற்கு இந்தியா வழங்கிய கொடை. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கும், மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முறை யோகா. அனைவரும் யோகாவினை வாழ்வில் ஓா் அங்கமாகக் கொண்டு, அதன் பலனைப் பெற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com