சமூகப் பரவலாக மாறிய ஒமைக்ரான்: மத்திய அரசு அறிவிப்பு

"இந்தியாவில் சமூக பரவல் காரணமாக ஒமைக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டுப் பயணிகளால் பரவாது"
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்டா, ஒமைக்ரான என உருமாறும் தன்மை கொண்ட கரோனா, விஞ்ஞான உலகுக்கே சவால் விடுத்துவருகிறது.

குறிப்பாக, இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, தில்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் பெரும்பாலான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "ஒமைக்ரான் இப்போது இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டது. குறிப்பாக நாட்டின் பெருநகரங்களில் ஒமைக்ரான் கரோனா ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தான் மெட்ரோ நகரங்களில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ஒமைக்ரான் புதிய பிஏ.2 வகையும் இந்தியாவில் கணிசமாக உள்ளது. இந்த வகையை பரிசோதனையின்போது கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளது. பெரும்பாலும் இந்த ஒமைக்ரான் கரோனா லேசான, அறிகுறியற்ற பாதிப்புகளைதான் ஏற்படுத்துகிறது. இதனால் பெரியளவில் பாதிப்பு இல்லை. 

இந்த மூன்றாம் அலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அது மிகவும் ஆபத்தான நிலைக்குச் செல்லவில்லை.

வரும் காலத்தில், இந்தியாவில் சமூக பரவல் காரணமாக ஒமைக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டுப் பயணிகளால் பரவாது. கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில், இது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்க இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு புதிய செயல்முறையை வடிவமைத்துள்ளது.

கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, தடுப்பூசிகளை முறையாக எடுத்துக் கொள்வது ஆகியவை மட்டுமே உருமாறும் கரோனா வகைகளுக்கு எதிராக நம்மைக் காக்கும்.

அதேபோல புதிதாகக் கண்டறியப்பட்ட மற்றொரு வகையான பி.1.640.2 குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இந்த வகை பாதிப்பு இந்தியாவில் யாருக்கும் கண்டறியப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com