முடிவுக்கு வந்த 5 ஆண்டுகள் காத்திருப்பு; இந்தியரை மணக்க இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் பெண்!

கொல்கத்தாவில் உள்ள நபரை மணம்புரிய வாகா -  அட்டாரி எல்லையைக் கடந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர் வந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தாவில் உள்ள நபரை மணம்புரிய வாகா -  அட்டாரி எல்லையைக் கடந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர் வந்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருபவர் ஜவேரியா கனும். அவர் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள சமீர் கானை திருமணம் செய்து கொள்வதற்காக தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அமிர்தசரஸில் உள்ள அட்டாரி பகுதிக்கு வந்த அவருக்கு மணமகன் சமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து இவர்கள் இருவரது திருமணமும் நடைறுவதில் காலத் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 5  ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு ஜவேரியா கனுமுக்கு 45 நாள்களுக்கு விசா (நுழைவு இசைவு) வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அட்டாரி பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜவேரியா கனும் பேசியதாவது: எனக்கு 45  நாள்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் இந்தியாவுக்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கு வந்தவுடன் என்னுடைய மகிழ்ச்சி மேலும்  அதிகரித்தது. எனது திருமணம் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. நான் இதற்கு முன்னதாக இரண்டு முறை விசா அனுமதி கோரி முயற்சித்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக மூன்றாவது முறையில் எனக்கு விசா அனுமதி கிடைத்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான முடிவு மற்றும் மகிழ்ச்சியான தொடக்கம். எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு விசா அனுமதி  கிடைத்துள்ளதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார். 

இவையனைத்தும் கடந்த 2018  ஆம் ஆண்டு தொடங்கியது. சமீர் கான் அவரது அம்மாவின் தொலைபேசியில் ஜவேரியா கனுமின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தனது விருப்பத்தைக் கூறியுள்ளார். 

இது குறித்து சமீர் கான் பகிர்ந்து கொண்டதாவது: நான் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தேன். நான் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜவேரியா கனுமின் புகைப்படத்தை என் அம்மாவின் தொலைபேசியில் பார்த்து எனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தேன். எனக்கு ஜவேரியாவை திருமணம் செய்து வைக்குமாறு அவரிடம் கூறினேன். எனது அம்மாவுக்கும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எனக்கும் ஜவேரியாவுக்கும் வருகிற ஜனவரியில் திருமணம் நடைபெறவுள்ளது. எனது திருமணத்துக்கு ஜெர்மனி, ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள எனது நண்பர்கள் அனைவரும் வருகை தரவுள்ளனர். ஜவேரியாவுக்கு விசா அனுமதி வழங்கிய இந்திய அரசாங்கத்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com