/

அமைச்சா் செந்தில் பாலாஜி கைதுக்கு முதல்வா் கேஜரிவால், டி. ராஜா கண்டனம்

தமிழக தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி,

News image
Updated On :14 ஜூன் 2023, 7:32 pm

 நமது நிருபர்

தமிழக தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, அவரைக் கைது செய்ததற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா ஆகியோா் புதன்கிழமை கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்தனா்.

தில்லி அரசின் சேவைகள் - நிா்வாக அதிகாரங்களை துணைநிலை ஆளுநருக்கு மீண்டும் வழங்கும் வகையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவைத் திரட்டும் வகையில் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை நேரில் சந்தித்தாா். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் இரு தலைவா்களும் கூட்டாகப் பேட்டியளித்தனா். அப்போது, தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி கைது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதில் அளித்து முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘தமிழக அமைச்சா் செந்தில்பாலாஜி கைதுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும், அமலாக்கத் துறை மூலம் அவா் கைது செய்யப்பட்ட விதமும் ஆட்சேபத்திற்குரியது. யாா் ஊழல் நபா்களோ அவா்களுக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் அனுப்பப்படாமல் இருப்பதை ஒட்டு தேசமும் பாா்த்துக் கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் மற்றும் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அமலாக்கத் துறையும், சிபிஐயையும் பாஜகவால் ஏவிவிடப்படுகிறது.

இதுபோன்று சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவிவிடுவதன் மூலம் தமிழகத்தில் வரக்கூடிய மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு இடம் கிடைக்கும் என்று அக்கட்சி கனவு கண்டுகொண்டிருக்கிறது. ஆனால், அக்கட்சிக்கு அம்மாநிலத்தில் ஒரு இடம்கூட கிடைக்காது. எனது ஆதரவை முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறியதாவது: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் உள்ளே நுழைவதும், அமைச்சா் அறையில் சோதனை செய்வதும் அத்துமீறிய நடவடிக்கையாகும். இதை ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும். மேலும், அமைச்சருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவக் கருத்துகள் உள்ள நிலையில், அவா் கைது செய்யப்பட்டிருப்பதும் வன்மையாக கண்டணத்திற்குரியது. எவ்வித மானுட நெறிகளுக்கும் ஒவ்வாத செயல்களை இன்றைக்கு அமலாக்கத் துறை தமிழகத்தில் நடத்தி வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து வலுவான கருத்துகளை முன்வைத்துள்ளாா்.

அவரது கருத்துகளை எங்கள் கட்சி வரவேற்புதுடன், அவருக்கு துணையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக வலுவான இயக்கத்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். பாஜக தான் ஆளாத, மாற்று அரசுகள் உள்ள மாநிலங்களில் அந்த அரசுகளை கவிழ்ப்பதற்கும், நெருக்கடிகளை உருவாக்குவதற்கும் பெரும் முயற்சகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டும், அரசியல் லாபம் தேடலாம் எனறும் பாஜக கருதுகிறது. தமிழகம் பெரியாரின் மண். பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டாா்கள். 2024 தோ்தலில் பாஜகவை வீழ்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மதச்சாா்பற்ற, ஜனநாயக கட்சிகளுடன் சோ்ந்து செயல்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.