எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களுக்கு இன்று (நவம்.8) உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை நாடுமுழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரேமாதிரியாக உருவாக்குவது கடினம் என்று கூறிய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றங்களிடம் விட்டுவிடுவதாக தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்தது.

இத்தகைய வழக்குகளை திறம்பட கண்காணிப்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்க உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டமியற்றும் பொறுப்புகளில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் முன்கூட்டியே தீர்க்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து அதுகுறித்த வழக்குகளைப் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய உயர் நீதிமன்ற இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் நிலை உள்ளது. அந்தத் தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com