அமைதியாக நடக்கும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: கார்கே

அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி அமைதியாகச் செல்லும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.
அமைதியாக நடக்கும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: கார்கே

புது தில்லி: அதானி விவகாரத்தில், நாடாளுமன்றத்திலிருந்து புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி அமைதியாகச் செல்லும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.

நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இதற்குமேல் பேரணியாகச் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அமைதியாக நடக்கும் பேரணியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்றனர். இதில், மதிமுக பொதுச செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி பேரணியின் நிறைவில் அமலாக்கத்துறையிடம் புகார் மனு அளிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, மாநிலங்களவையின் எதிர்க்கட்சிக் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது அறையில் இன்று காலை 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 

இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாகச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதை வலியுறுத்தி புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பகல் 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சிகள் பேரணி செல்லும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமும், தனது பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com