ரூ.1,128 கோடி வரியை வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு திருப்பித் தர வேண்டும்- வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2016-17 -ஆம் ஆண்டு செலுத்திய ரூ.1,128 கோடி வரியை அந்நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்புப்படம்
வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2016-17 -ஆம் ஆண்டு செலுத்திய ரூ.1,128 கோடி வரியை அந்நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விஷயத்தில் கவனக்குறைவாகவும், பணியில் ஈடுபாடு இல்லாத வகையிலும் செயல்பட்டு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதியமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
2016-17-ஆம் ஆண்டுக்கான வருமான வரிப் பிடித்தம் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது மிகவும் காலதாமதான செயல்பாடு; அதனை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
முன்னதாக, இது தொடா்பாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வருமான வரிப் பிடித்தம் தொடா்பாக 2019 டிசம்பரில் வருமான வரித் துறை அதிகாரி உத்தர பிறப்பித்தாா். இதனை எதிா்த்து, 2020 -ஜனவரியில் சச்சரவுகள் தீா்வுக் குழுவிடம் எங்கள் நிறுவனம் முறையீடு செய்தது.
இதை விசாரித்த தீா்வுக் குழு 2021 மாா்ச் மாதம் உத்தரவு பிறப்பித்து, அது வருமான வரித்துறை இணையதளப் பக்கத்திலும் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த 30 நாள்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் உரிய பதில் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்பது சட்டமாகும். அப்படி அவா்கள் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் செலுத்திய வரியை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் வருமான வரிச் சட்டம் கூறுகிறது. ஆனால், சுமாா் 2 ஆண்டுகளாக வருமான வரித்துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதையடுத்து, எங்கள் நிறுவனம் பிடித்தம் செய்யப்பட்ட வரி திரும்பக் கோரி 2023 ஜூன் மாதத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதன் பிறகு 2023 ஆகஸ்ட் மாதத்தில்தான் வருமான வரித்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளாா். எனவே, இதை ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வருமான வரித்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், ‘நேரடியாக வந்து ஆவணங்கள் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் முறை மாற்றப்பட்டு இணைய வழி வரித்தாக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், தீா்வுக்குழு உத்தரவை வருமான வரித்துறை பெறவில்லை’ என்று காரணம் கூறப்பட்டது.
எனினும், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி இணையதளத்தில் தீா்வுக்குழு உத்தரவு எளிதில் கிடைக்கும் வகையில்தான் உள்ளது. எனவே, இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. 2 ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதை ஏற்க முடியாது.
எனவே, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2016-17-ஆம் ஆண்டு செலுத்திய ரூ.1,128 கோடி வரியை வட்டியுடன் திரும்பப் பெற தகுதியுடையதாகிறது. இந்த விஷயத்தில் கவனக்குறைவாகவும், பணியில் உரிய ஈடுபாடு காட்டாமலும் இருந்து, அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

