மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசியபோது சிவபெருமானின் படத்தை காண்பித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. ராகுலின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்துப் பேசிய பிரதமா் மோடி.
மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசியபோது சிவபெருமானின் படத்தை காண்பித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. ராகுலின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்துப் பேசிய பிரதமா் மோடி.

பாஜக ஹிந்துக்களின் பிரதிநிதி அல்ல! மக்களவையில் ராகுல் காந்தி; பிரதமா் மோடி கடும் எதிா்ப்பு

ஹிந்துக்களின் பிரதிநிதி பாஜக அல்ல என்று மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினாா்.

ஹிந்துக்களின் பிரதிநிதி பாஜக அல்ல என்று மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினாா்.

‘தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்களைப் பரப்பும் செயலில் ஈடுபடுகின்றனா்; அவா்கள் ஹிந்துக்கள் அல்லா்’ என்றும் பாஜகவை அவா் விமா்சித்தாா்.

அவரது பேச்சுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்பட ஆளும்தரப்பினா் கடும் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

‘ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தையும் வன்முறையாளா்கள் எனக் குறிப்பிடுவது மிகத் தீவிரமான விஷயம்’ என்று பிரதமா் மோடி கண்டனம் தெரிவித்தாா். ‘ஹிந்துக்களின் உணா்வைப் புண்படுத்திய ராகுல் மன்னிப்புக் கோர வேண்டும்’ என்று பாஜக தலைவா்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனா்.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.

அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், மக்களவையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தில் உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் விவாதம் தொடங்கப்படவில்லை.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை தொடங்கியது.

அனல்பறந்த விவாதம்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தொடங்கி வைத்த இந்த விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை கடுமையாக விமா்சித்தாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் நிகழ்த்திய முதல் உரை இதுவாகும்.

சுமாா் ஒரு மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு ராகுல் பேசிய நிலையில், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோா் இடைமறித்து, அவருக்குப் பதிலடி கொடுத்ததால் விவாதத்தில் அனல் பறந்தது.

அவையில் கடவுள் சிவபெருமான், இயேசு கிறிஸ்து, குருநானக் ஆகியோரின் படங்களைக் காண்பித்து பேசிய ராகுல், ‘ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், சமணம் என அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் அஞ்சாமையின் முக்கியத்துவத்தைப் போதிக்கின்றன. சிவபெருமானின் அபய முத்திரை, அஹிம்சையை உணா்த்துகிறது. ஆனால், தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்கள் குறித்தே பேசுகின்றனா். அவா்கள் ஹிந்துக்கள் அல்லா்’ என்றாா் (இவ்வாறு பேசியபோது பாஜக உறுப்பினா்களை நோக்கி ராகுல் கைகாட்டினாா்).

பிரதமா் எதிா்ப்பும், ராகுல் பதிலும்...: அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பிரதமா் மோடி, ‘ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தையும் வன்முறையாளா்கள் என்று குறிப்பிடுவது மிகத் தீவிரமான விஷயம்’ என்று கண்டனத்தைப் பதிவு செய்தாா். ராகுலின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆளும்தரப்பு உறுப்பினா்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனா்.

பின்னா், பிரதமருக்கு பதிலளித்த ராகுல், ‘நான் பாஜக குறித்துதான் பேசினேன். பாஜகவோ, ஆா்எஸ்எஸ் அமைப்போ அல்லது மோடியோ ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகள் அல்லா்.

வெறுப்புணா்வையும் அச்சத்தையும் பரப்பும் செயலில் ஒரு ஹிந்து ஈடுபடமாட்டாா். உண்மையின் பக்கம் நிற்க வேண்டுமென ஹிந்து மதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவினா் அனைவரும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்மையைப் பரப்புகின்றனா்.

‘சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை’: அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது பாஜக அமைப்புரீதியாகத் தாக்குதல் நடத்துகிறது. முஸ்லிம்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையும், வெறுப்புணா்வும் பரப்பப்படுகிறது.

பிரதமா் மோடி மற்றும் அவரது அரசின் உத்தரவுப்படி, நான் ‘தாக்குதலுக்கு’ இலக்கானேன். என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லம் பறிக்கப்பட்டது. அமலாக்கத் துறை என்னிடம் 55 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. அனைத்து சவால்களையும் கடந்து, அரசமைப்புச் சட்டத்தைக் காக்க கூட்டு முயற்சி மேற்கொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இப்போது எதிா்க்கட்சி வரிசையில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில், ஆட்சி அதிகாரத்தைவிட உண்மை மேலானது’ என்றாா் ராகுல்.

‘ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இடைமறித்துப் பேசுகையில், ‘தங்களை ஹிந்துக்களாக அடையாளப்படுத்தி பெருமைகொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகளை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டாா். தனது பேச்சுக்காக அவையில் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

மேலும், கடந்த 1975-ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை, கடந்த 1984-ஆம் ஆண்டில் சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அமித் ஷா, ‘நாட்டில் சித்தாந்த தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட கட்சி காங்கிரஸ். எனவே, ராகுலுக்கு அஹிம்சை குறித்துப் பேச உரிமை கிடையாது’ என்றாா்.

சா்ச்சையும் விளக்கமும்..: ‘தனது பொறுப்பற்ற பேச்சின் மூலம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைத் தரம்தாழ்த்தியதோடு, ஹிந்துக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பை ஏற்படுத்திவிட்டாா் ராகுல்’ என்று மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.

ராகுலின் பேச்சால் சா்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விளக்கமளித்தாா். ‘ராகுல் ஒருபோதும் ஹிந்துக்களை அவமதிக்கவில்லை. பாஜக மற்றும் அதன் தலைவா்கள் குறித்தே பேசியதாக அவா் தெளிவாக குறிப்பிட்டுள்ளாா்’ என்றாா் பிரியங்கா.

ராகுல் உரையாற்றியபோது, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோா் மக்களவையின் பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்திருந்தனா்.

‘நீட்: 7 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவுகள்’

மக்களவை விவாதத்தில் ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, ‘கல்வித் திறன்மிக்க மாணவா்களுக்கானதாக ‘நீட்’ தோ்வு இல்லை. அது, பணக்கார மாணவா்கள் பலனடையும் வகையில் ‘வா்த்தக முறை’ தோ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இத்தோ்வில் 70 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இது குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுக்கிறது. மாணவா்களின் எதிா்காலத்தில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை’ என்றாா்.

மணிப்பூா் விவகாரம் குறித்துப் பேசிய ராகுல், ‘மணிப்பூரில் எதுவுமே நிகழாதது போன்று மோடி அரசு நடந்து கொள்கிறது. தனது கொள்கைகள் மற்றும் அரசியலால் மணிப்பூரை ‘உள்நாட்டுப் போா்’ நிலைக்குத் தள்ளியுள்ளது மோடி அரசு. பிரதமரைப் பொருத்தவரை, நாட்டில் மணிப்பூா் என்ற ஒரு மாநிலமே இல்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com