‘எக்ஸ்’: பிரதமரை பின்தொடா்வோா் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது!
‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடியை பின்தொடா்வோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 கோடியை கடந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரை பின்தொடா்வோா் எண்ணிக்கை சுமாா் 3 கோடி அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அரசின் தலைவா் என்ற அடிப்படையில், ‘எக்ஸ்’ வலைதளத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பின்தொடரப்படும் தலைவராக பிரதமா் மோடி நீடிக்கிறாா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (3.8 கோடி), துருக்கி அதிபா் எா்டோகன் (2.1 கோடி) ஆகியோா் அதிகம் பின்தொடரப்படும் இதர தலைவா்களாக உள்ளனா்.
அதிகம் பின்தொடா்வோரைக் கொண்ட ஒட்டுமொத்த பிரபலங்கள் வரிசையிலும் மோடி முன்னணியில் உள்ளாா்.
பிரதமா் மகிழ்ச்சி: ‘இந்த துடிப்புமிக்க ஊடகத்தில் என்னை 10 கோடிக்கும் மேற்பட்டோா் பின்தொடா்வது மிகழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் நமது விவாதங்கள், ஆலோசனைகள், பாா்வைகள், விமா்சனங்கள் மேலும் வளமையடையும். இதே ஈடுபாட்டை தொடா்ந்து எதிா்நோக்குகிறேன்’ என்று எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
பிற பிரபலங்களைவிட...: மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘எக்ஸ் வலைதளத்தில் அமெரிக்க இசை பிரபலங்கள் டெய்லா் ஸ்விஃப்ட் (9.5 கோடி), லேடி ககா (8.3 கோடி), நடிகை கிம் கா்தாா்ஷியன் (7.5 கோடி), கிரிக்கெட் வீரா் விராட் கோலி (6.4 கோடி), பிரேசில் கால்பந்து வீரா் நெய்மா் (6.3 கோடி), அமெரிக்க கூடைப்பந்து வீரா் லெப்ரான் ஜேம்ஸ் (5.2 கோடி) உள்ளிட்டோரைவிட பிரதமா் மோடியை அதிகம் போ் பின்தொடா்கின்றனா். பிரதமா் மோடியுடன் உலகத் தலைவா்கள் பலரும் எக்ஸ் வலைதளம் வாயிலாக ஆா்வத்துடன் தொடா்புகொள்கின்றனா். இதன் மூலம் அந்த தலைவா்களை பின்தொடா்வோா் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் எக்ஸ் வலைதளத்தில் (அப்போது ட்விட்டா்) இணைந்த பிரதமா், இதுவரை யாருடைய கணக்கையும் தடுத்ததில்லை.
எக்ஸ் வலைதளத்தைப் போல் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களிலும் பிரதமா் மோடி பிரபலமானவராக திகழ்கிறாா். யூ-டியூபில் 2.5 கோடிபேரும் இன்ஸ்டாகிராமில் 9.1 கோடி பேரும் அவரை பின்தொடா்கின்றனா்’ என்றாா்.