
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, நாடாளுமன்றத்துக்கு தான் வந்தபோது, மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்களால் தடுக்கப்பட்டு, எங்குச் செல்ல வேண்டும் என கேட்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்றத்துக்கு தான் வந்த போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் தன்னை தடுத்து நிறுத்தி, நாடாளுமன்றத்துக்கு வந்த காரணம் என்ன என்பதைக் கேட்டதாகவும், இதற்கு முன்பு இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் தான் தடுத்து நிறுத்தப்பட்டு, கேள்வி கேட்கப்பட்ட சம்பவத்தை தன்னதால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றும் இந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு எந்த அலுவல் இல்லாத நேரத்திலும் செல்லலாம் என்று தான் நம்பியிருந்ததாகவும், தான் நாடாளுமன்றத்துக்கு வந்த காரணத்தை அவைத் தலைவருக்குத்தான் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மே மாதத்தில் இருந்து, நாடாளுமன்ற பாதுகாப்புச் சேவையிடமிருந்து, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் வசம் நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, பார்வையாளர் மாடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்துக்குள் குதித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பு சிஐஎஸ்எஃப் வசம் சென்றது.
தற்போது சிஐஎஸ்எஃப் தான் நாடாளுமன்றத்தின் புதிய மற்றும் பழைய கட்டடங்களின் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில், நாடாளுமன்ற பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.