யுனெஸ்கோ உலக பிராந்திய நினைவுப் பட்டியலில்...ராமசரிதமானஸ், பஞ்சதந்திர கதைகள்

யுனெஸ்கோ உலக பிராந்திய நினைவுப் பட்டியலில்...ராமசரிதமானஸ், பஞ்சதந்திர கதைகள்

ராமசரிதமானஸ் கதைகளின் கையெழுத்துப் பிரதி மற்றும் பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்துப் பிரதி உள்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து 20 பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

யுனெஸ்கோவின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக பிராந்திய நினைவுப் பட்டியலில் பழைமைவாய்ந்த ராமசரிதமானஸ் கதைகளின் கையெழுத்துப் பிரதி மற்றும் பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்துப் பிரதி உள்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து 20 பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மங்கோலியா தலைநகர் உலோன்பாடாரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான யுனெஸ்கோ நினைவு உலக குழுவின் 10-ஆவது பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "நிகழாண்டு யுனெஸ்கோ உலக பிராந்திய நினைவுப் பதிவுக்கான பட்டியல், மனித ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் கற்பனைகளைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராமரின் சரித்திரத்தைக் கூறும் துளசிதாசரின் "ராமசரிதமானஸ்' கதையின் கையெழுத்துப் பிரதி, பஞ்சதந்திர கதைகளின் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதி ஆகியவற்றை இந்தப் பட்டியிலில் இடம்பெறச் செய்ய முடிவெடுக்கப்பட்டது' என்றார்.

இது தொடர்பாக யுனெஸ்கோ சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கல்கா மங்கோலியர்களின் பரம்பரைப் பிரபுக்களின் குடும்ப விளக்கப்படம், செங்கிஸ் கான் வீடு, சீனாவில் உள்ள ஹூய்ஷோ சமூகங்களின் புகைப்படம் ஆகியவை பிராந்திய குடும்ப வரலாற்றின் சான்றாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஹெலிகாப்டர்கள் மற்றும் சூரிய மின் தகடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அவை கற்பனையாக குறிப்பிடப்பட்ட வங்கதேச அறிவியல் புனைக்கதை பெண்ணிய எழுத்தாளர் எஸ்.ரோகியா ஹுûஸனின் 1905-ஆம் ஆண்டைச் சேர்ந்த "சுல்தானாவின் கனவில்' என்ற புனைக்கதை பிரதியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதுபோல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து 20 பொருள்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com