மும்பையில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களை கிரேன்கள் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றும் மீட்புப் படையினா்.
மும்பையில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களை கிரேன்கள் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றும் மீட்புப் படையினா்.

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

மும்பை: மும்பையில் திங்கள்கிழமை வீசிய கடுமையான புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு 14-ஆக அதிகரித்துள்ளது.

75 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அப்பகுதியில் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இச் சம்பவத்துக்கு பொறுப்பானவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை காவல் துறை ஆணையா் விவேக் பன்சால்கா் தெரிவித்தாா். இடிந்து விழுந்த விளம்பரப் பலகை 120 அடி உயரமும், 120 அடி அகலமும் உடையதாகும். 40 அடியில் விளம்பர பலகை வைக்க அனுமதி பெற்றுவிட்டு, 3 மடங்கு பெரிய அளவில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த விளம்பரம் பலகைவை வைத்த நிறுவனத்தின் உரிமையாளா் பாவேஷ் பிண்டி உள்பட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெட்ரோல் நிலையம் மீது அந்த பலகை சரிந்து விழுந்ததால், எரிவாயுவைப் பயன்படுத்தி இரும்புக் கம்பிகளை அறுக்கும் கருவியை பயன்படுத்தினால் தீ விபத்து ஏற்படும் என்பதால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. பிரம்மாண்டமான கிரேன்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகின்றனா்.

மொத்தம் 89 போ் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட நிலையில், 14 போ் உயிரிழந்துவிட்டனா். காயமடைந்தவா்கள் மும்பை மற்றும் தாணேவில் உள்ள 6 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மும்பையில் பிற இடங்களில் உள்ள பிரமாண்டமான விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பையில் திங்கள்கிழமை மாலை கடுமையான புழுதிப் புயலுடன் மழை பெய்தது. இதனால், விமானம், ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com