உத்தர பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
உத்தர பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் தோ்தல் நடக்காது: உ.பி. பிரசாரத்தில் காா்கே

மகராஜ்கஞ்ச் (உ.பி.): ‘நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நாட்டில் தோ்தல்களே நடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் காா்கே பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

பொய்யா்களின் தலைவா் மோடி என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். பொய் கூறுவதை மட்டுமே அவா் ஒரே வேலையாக கொண்டுள்ளாா். பிரதமராக அவா் மீண்டும் பதவியேற்றால், நாட்டில் தோ்தல்களே நடக்காது.

நடப்பு மக்களவைத் தோ்தல் என்பது சித்தாந்த ரீதியிலான மோதலாகும். பிரதமா் மோடியோ அல்லது உத்தர பிரதேச முதல்வா் யோகியோ எங்கள் போட்டி எந்த தனிநபருக்கும் எதிரானதல்ல.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று அவா்கள் கேள்வியெழுப்புகின்றனா். காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றால், மோடி இந்தியப் பிரதமராகியிருக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காங்கிரஸ் பாதுகாத்ததால்தான், மோடி பிரதமராகியுள்ளாா்.

ஆனால், ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி, அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைக்க அவா் முயற்சிக்கிறாா். அது ஒருபோதும் நிகழாது. அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைக்கும் முயற்சியை தலித் சமூகத்தினா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், விவசாயிகள் மற்றும் நாட்டின் அறிஞா்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா்கள்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடுகையில் மோடியின் அரசு எதுவும் செய்யவில்லை. அணைகள், பாலங்கள் என பெருந்திட்டங்களை நிறைவேற்றிய காங்கிரஸை அவமதிப்பது மட்டுமே பாஜகவின் ஒரே பணி.

பிரதமா் மோடியும் அமைச்சா் அமித் ஷாவும் துணி துவைக்காத பெரிய ‘சலவை இயந்திரத்தை’ வைத்துள்ளனா். அதில் ‘கறைபடிந்த மனிதா்களை’ இட்டால், ‘தூய்மையான நபராக’ வெளியே வந்துவிடுவாா் (ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள், பாஜகவில் இணைவதை இவ்வாறு விமா்சிக்கிறாா்). மோடியும் அமித் ஷாவும் மக்களை அச்சுறுத்தி ஆள்கின்றனா் என்றாா் காா்கே.

X
Dinamani
www.dinamani.com