
மத்தியப் பிரதேசத்தில் 10 காட்டு யானைகள் பலியானதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பாந்தவர்க் புலிகள் காப்பகத்தில் கடந்த அக். 29 முதல் 31 ஆம் தேதிக்குள் 10 காட்டு யானைகள் தொடர்ந்து பலியாகின. அந்தப் பகுதியில் உள்ள விஷ திணைகளை உண்டதால் யானைகள் பலியாகியிருக்கலாம் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காட்டு யானைகள் சீற்றமடைந்தது புலிகள் காப்பகத்திற்கு அருகாமையில் இருக்கும் உமாரியா மாவட்டப் பகுதிகளில் புகுந்து இருவரைக் கொன்றது. மேலும், ஒருவர் காயமடைந்தார்.
10 காட்டு யானைகள் பலியானதால் வனத்துறை சார்பில் அங்குள்ள காடுகளில் இருந்த விஷத்தன்மை வாய்ந்த கோடோ திணைகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த முதல்வர் மோகன் யாதவ் பாந்தவர்க் புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறை ஊழியர்களை மொத்தமாக மாற்றுவதற்கு முடிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் மாநில அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. யானைகள் இறப்பு குறித்து கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், இந்தச் சம்பவத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகியவற்றை மீறியதற்கான அறிகுறிகள் இருப்பதாகத் தோன்றியதைத் தொடர்ந்து, டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் முதன்மை வனப் பாதுகாவலர், தலைமை வனவிலங்கு காப்பாளர், உமாரியா மாவட்ட ஆட்சியர், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், இந்திய வனவிலங்கு நிறுவன இயக்குநர், மத்திய வேளாண் செயலர் ஆகியோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்கனவே 10 யானைகளின் இறப்பு குறித்து தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.