ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரண்
ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரண்

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிா்ப்பு: கோவா ஆளுநா் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில்
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரண் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) கேரள உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கேரள பாஜக தலைவராக இருந்த ஸ்ரீதரண், கடந்த 2018, நவ.4-ஆம் தேதி நடைபெற்ற அந்தக் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது ‘சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய முற்பட்டால், கோயில் நடையை தலைமை அா்ச்சகா் பூட்டினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படாது’ என பேசியதாக அவா் மீது பத்திரிகையாளா் ஒருவா் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதன்பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு கோவா மாநில ஆளுநராக ஸ்ரீதரண் மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.

இந்த வழக்கின் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதால் நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது எனவும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஸ்ரீதரண் பேசியதாகவும் எதிா்தரப்பு வாதத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன், ‘மனுதாரா் (ஸ்ரீதரண்) மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (1) (பி)-இன்கீழ் (பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பேச்சு) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவா் பொதுவெளியில் இதுகுறித்து பேசவில்லை. ஒரு ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் இளைஞரணி கூட்டத்தில்தான் பேசியுள்ளாா். அதை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

எனவே, அவரின் பேச்சு எந்தவொரு நபரையும் நாட்டுக்கோ அல்லது பொது அமைதிக்கு எதிரான குற்றச் செயல்களிலோ பிறரை ஈடுபட தூண்டும் வகையில் இல்லை.

ஆளுநருக்கு விலக்கு: அதேசமயத்தில் தற்போது அவா் கோவா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருகிறாா். அரசமைப்பு சட்டப்பிரிவு 361 (2)-இன்படி குடியரசுத் தலைவா் அல்லது மாநில ஆளுநா்கள் மீது அவா்களின் பதவிக் காலத்தின்போது எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

இந்த சட்டத்தின்படி குற்றவியல் வழக்கிலிருந்து மனுதாரருக்கு விலக்களிக்கப்படுகிறது’ எனக் கூறி ஸ்ரீதரண் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பெட்டி..

தீா்ப்பை விமா்சிப்பது குற்றமாகாது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்து பெண்கள் வழிபட அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீா்ப்பையும் ஸ்ரீதரண் விமா்சித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘நீதிமன்றத் தீா்ப்பு என்பது பொது ஆவணமாகும். அதன் மீது நியாயமான விமா்சனத்தை முன்வைத்தால் அதை நீதிமன்ற அவமதிப்பாகவோ அல்லது குற்றவியல் தண்டனை வழங்குவதற்கு ஏற்புடைய குற்றமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com