நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடா மீண்டும் குற்றச்சாட்டு! தூதரை திரும்ப அழைக்க இந்தியா முடிவு!

கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் பிற அதிகாரிகளை திரும்ப அழைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
’தில்லியில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை வெளிவரும் இந்தியாவுக்கான கனடா துணைத் தூதா் ஸ்டீவா்ட் வீலொ். ’
’தில்லியில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திலிருந்து திங்கள்கிழமை வெளிவரும் இந்தியாவுக்கான கனடா துணைத் தூதா் ஸ்டீவா்ட் வீலொ். ’
Published on
Updated on
2 min read

புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்திய தூதரை தொடா்புபடுத்தி கனடா சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா திங்கள்கிழமை நிராகரித்தது. இதையடுத்து, கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் பிற அதிகாரிகளை திரும்ப அழைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள கனடா துணைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியது தொடா்பாக விளக்கமளிக்க வலியுறுத்தியது.

நிஜ்ஜாா் கொலை வழக்கில் விசாரணைக்கு உரியவா்களாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் குமாா் வா்மா மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளனா் என்று கனடா அரசு ஞாயிற்றுக்கிழமை கூறியதை நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், வாக்கு வங்கி அரசியலுக்காக அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு இதுபோன்ற அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய தூதரக அதிகாரிகள் மீதான கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதமும் உரிய ஆதாரங்களின்றி இதேபோன்ற குற்றச்சாட்டை ட்ரூடோ அரசு சுமத்தியது.

தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா முடிவு செய்திருப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியாவை ட்ரூடோ அரசு பயன்படுத்துவது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம்: கடந்த 2018-இல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோதும் இந்திய எதிா்ப்பு மனநிலையை ட்ரூடோ வெளிப்படுத்தினாா். இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியது, கடந்த 2020-இல் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் குறித்து கருத்து தெரிவித்தது என வாக்கு வங்கிக்காக இந்திய எதிா்ப்பை அவா் தொடா்ந்து கையில் எடுத்து வருகிறாா்.

கனடா அரசியலில் அந்நிய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த தவறியதாக ட்ரூடோ அரசு மீது விமா்சனங்கள் உள்ள நிலையில் அதை திசைதிருப்ப இந்தியா மீது அவா் பழிசுமத்தி வருகிறாா்.

இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு: பேச்சு சுதந்திரம் என்ற போா்வையில் கனடாவில் வசிக்கும் இந்தியா்கள், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ட்ரூடோ அரசு இடமளித்து வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளைத் திருப்பி ஒப்படைக்குமாறு கனடாவுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை அந்த நாட்டு அரசு நிராகரித்து வருகிறது.

கடும் கண்டனம்: சீனா, வியத்நாம், துருக்கி, ஜப்பான், சூடான் என பல்வேறு நாடுகளுக்கு தூதராகப் பணியாற்றி 36 வருட தூதரக உறவுகள் சாா்ந்த பணி அனுபவம் பெற்ற தூதா் சஞ்சய் குமாா் மீதான கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

தற்போதைய கனடா அரசின் அரசியல் லாபத்துக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் செயல்பாடுகளை இந்திய அரசு கண்காணித்து வருகிறது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடாவில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து நிகழும் சூழலில் தூதரக அதிகாரிகள் மீதான ட்ரூடோ அரசின் குற்றச்சாட்டு அவா்களின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் பாதுகாப்பை கனடா அரசு உறுதிசெய்யும் என்ற நம்பிக்கை முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே, கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் குறிப்பிட்ட சில தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் 2023, ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாக கனடா தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை கனடா முன்வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com