
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சஹர் பகுதியில், தனது 60 வயது தாயை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 36 வயது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு திங்கள்கிழமை, விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,ரூ. 51 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு குறித்து பேசிய அரசுத் தரப்பு வழக்குரைஞர் விஜய் குமார் ஷர்மா, இன்று நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. எனது இத்தனை ஆண்டு கால வழக்குரைஞர் பணி அனுபவத்தில், ஒரு தாய், இவ்வாறு கதறி அழுது பார்த்ததேயில்லை, தனது 36 வயது மகன் தன்னை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கணவர் இறந்துவிட்ட நிலையில், தன்னுடன் மனைவியாக வாழும்படி வற்புறுத்தியதாகவும், தனது மகன் ஒரு அரக்கன் என்றும் கதறி அழுதுள்ளார். இந்திய அரசியல் சட்டப்பிரிவு 376-ன் கீழ் மிகக் கொடூர குற்றத்துக்கான தண்டனை மகனுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவம், புலந்த்ஷஹரில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து தனது மற்ற மகன்களிடம் தாய் சொல்லியதைத் தொடர்ந்து, குற்றவாளியின் இளைய சகோதரர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தது குறித்து சகோதரர்கள் கூறுகையில், குடும்பத்துக்குள்ளேயே பேசி இதற்கு தீர்வு காணவே நினைத்தோம். ஆனால், மூத்த சகோதரர், எங்களது தாயை, அவரது மனைவி போல இருக்கும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்ததால்தான், காவல்நிலையத்தில் புகார் அளித்தோம் என்கின்றனர்.