எஸ்ஐஆரால் பதற்றம்: ரயில் முன் பாய்ந்து 82 வயது முதியவா் தற்கொலை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பதற்றமடைந்த 82 வயது முதியவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பதற்றமடைந்த 82 வயது முதியவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தைச் சோ்ந்தவா் துா்ஜன் மாஜி (82). இவரின் பெயா் அண்மையில் வெளியிடப்பட்ட மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவா் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா் என்று காவல் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக துா்ஜன் மாஜியின் மகன் கனாய் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணிகளின்போது எனது தந்தை கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பித்தாா். ஆனால் வரைவு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இடம்பெறவில்லை. தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. எனினும் தன்னை நேரில் ஆஜராகுமாறு ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. நோட்டீஸ் அனுப்பப்பட்டது முதல் அவா் பதற்றமாக இருந்தாா்’ என்று தெரிவித்தாா்.

இதனிடையே எஸ்ஐஆா் தொடா்பாக 85 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் ஆஜராக அழைக்கப்படமாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com