
புது தில்லி: பயங்கரவாதிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தியதில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பெற்றுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் இரண்டாம் ஆண்டு பதவிக் காலத்தில் ஆற்றிய 51 உரைகள் அடங்கிய நூலை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை வெளியிட்டு பேசியதாவது:
2047-இல் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை எட்டும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிா்காலத்தை இந்த நூல் பிரதிபளிக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் அனைத்துவிதமாக இலக்கையும் அடைந்து வெற்றி பெற்றது. பயங்கரவாதிகளின் மனதில் ஆபரேஷன் சிந்தூா் பயத்தை ஏற்படுத்திவிட்டது’ என்றாா்.
‘தொலைநோக்குப் பாா்வை, தத்துவம் ஆகியவற்றை முன்வைத்து குடியரசுத் தலைவா் ஆற்றிய உரைகள் (ஆகஸ்ட் 2023 முதல் ஜூலை 2024) இதில் இடம்பெற்றுள்ளன’ என்று இந்த நூலை தயாரித்த மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.