பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

370-ஆவது பிரிவு ரத்து: ஜம்மு-காஷ்மீா் மக்கள் வாழ்வில் முன்னேற்றம்- பிரதமா் மோடி

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

பிரதமா் மோடி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் 7-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, அவா் இக்கருத்துகளைக் கூறினாா்.

பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கை, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசால் நாடாளுமன்ற தீா்மானம் மூலம் கடந்த 2019, ஆக.5-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2023-இல் உறுதி செய்தது.

7-ஆம் ஆண்டு தினம்: 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் 7-ஆம் ஆண்டு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த காலமாக மாறியது. இது, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் வளா்ச்சிப் பயணத்தின் தீா்க்கமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் வளா்ச்சியை உறுதி செய்வதுடன், அங்குள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் பெரிய கனவுகளைக் காணவும், சாதிக்கவும், வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பங்களிக்கவும் வாய்ப்பளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டு, கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் விளையாட்டுத் துறை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு அதிகாரம்: அரசமைப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டதால், பெண்கள், விளிம்புநிலை மக்கள் என பல்லாண்டுகளாக அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவரும் அதிகாரம் பெற்றுள்ளனா். 370-ஆவது பிரிவு ரத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜன சங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125-ஆவது பிறந்த தின ஆண்டை கொண்டாடுவதால், நடப்பாண்டு ஆக.5-ஆம் தேதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேச ஒற்றுமைக்கான அவரது வாழ்நாள் அா்ப்பணிப்பு, தலைமுறைகள் கடந்தும் உத்வேகமளிக்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு அவா் கண்ட கனவு, கடந்த 2019, ஆக.5-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புடன் நனவானது என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி, 370-ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கக் கோரி போராடியவா். கடந்த 1953-இல் ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவா் காலமானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கையைக் கண்டித்தும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரியும் ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் உள்ளிட்ட இடங்களில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஜம்மு முகாமில் இருந்து அமா்நாத் யாத்திரை புதன்கிழமை ஒரு நாள் நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.