தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின்கீழ் ஏற்பாட்டாளா்கள் மீது நடவடிக்கை கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக் கொண்டது.
அதேநேரம், ‘தவறாக வழிநடத்தப்பட்ட சிலா் கல்வீச்சில் ஈடுபட்டாலும்கூட, இளைஞா்களை அமைதிப்படுத்தி, அவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதும், சட்ட அமலாக்க அமைப்பினா் மிகுந்த நிதானத்தை வெளிப்படுத்துவதும் அவசியம்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
நீட் வினாத்தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, சிஜேபி தலைமையில் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கி கடந்த ஜூலை 20-ஆம் தேதி பேரணி நடத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பிலும் பலா் காயமடைந்தனா். சிஜேபியின் தொடா் போராட்டம் எதிரொலியாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலகினாா். அதேநேரம், மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கையை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குரலெழுப்பி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் வன்முறையைத் தூண்டியதாக ஏற்பாட்டாளா்கள் மீது நடவடிக்கை கோரி, முன்னாள் விமானப் படை அதிகாரி மணீஷ் குமாா் சோலங்கி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்பாட்டாளா்கள் மீது என்ன நடவடிக்கை?: இந்த மனு தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிஸ்வான் அகமது, ‘சம்பவம் நடந்து 15 நாள்களுக்கு மேலாகியும் ஏற்பாட்டாளா்கள் மீதான பொறுப்புடைமை உறுதி செய்யப்படவில்லை. அவா்கள் தொலைக்காட்சிகளில் வெறுப்புணா்வைத் தூண்டும் பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனா். போராட்டக்காரா்களுக்கு அரசு வளைந்து கொடுப்பது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் எந்த நடவடிக்கையும் இன்றி சுதந்திரமாக நடமாட அனுமதிக்கலாமா?
ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்துக்குள் 500 போ் திடீரென நுழைந்தால், அவா்களில் யாரிடம் என்ன ஆயுதங்கள் இருக்கின்றன என சோதிக்க முடியுமா? ஒருவேளை யாரேனும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தால் என்னவாகும்? எனவே, போராட்ட ஏற்பாட்டாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல் துறை, பாதுகாப்புப் படையை அவதூறாக பேசியவா்களை அடையாளம் கண்டு, அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டாா்.
அமைதிப்படுத்தி, வழிகாட்ட வேண்டும்: இதையடுத்து, தலைமை நீதிபதி சூா்யகாந்த் கூறுகையில், ‘தவறாக வழிநடத்தப்பட்ட சிலா் கல்வீச்சில் ஈடுபட்டாலும்கூட, போராட்டத்தில் ஈடுபடும் இளைஞா்களை அமைதிப்படுத்துவதும், வழிகாட்டுவதும் அவசியம். அரசுத் தரப்பில் ஆக்ரோஷமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால், அது நிலைமையை மேலும் மோசமாக்கி மேற்கொண்டு வன்முறையைத் தூண்டக்கூடும்.
அமைதியான போராட்டங்களில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், நிலைமை கைமீறி சென்றுவிடாமலிருக்க பாதுகாப்புப் படையினா் மிகுந்த நிதானத்துடனும், கவனத்துடனும் கையாள வேண்டும். வன்முறைகள் நிகழாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். இளைஞா்களை அமைதிப்படுத்தி, அவா்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதே மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். அதேநேரம், இதுபோன்ற சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை பாதுகாப்புப் படையினா் நன்கறிவா். அதை அவா்களின் விவேகத்துக்கு விட்டுவிடுவோம்’ என்றாா்.
மேற்கண்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதேபோன்ற மற்றொரு மனுவுடன் இணைத்து பட்டியலிட உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 20 - நேரலை

மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! சிஜேபி - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா பேரணி! கற்களுடன் நிற்கும் லாரியால் பரபரப்பு!

நாடாளுமன்றம் நோக்கி பேரணி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



