தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

வழிப்பறி வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரின் விடுதலையை உறுதிசெய்தது தில்லி உயா்நீதிமன்றம்

வழிப்பறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
Published on

வழிப்பறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்புதவறாக இருக்கும் நிலையில் மட்டுமே அந்த முடிவில் தலையிட முடியும் என உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

வழிப்பறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்து அமா்வு நீதிமன்றம் கடந்த 2014, நவம்பரில் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓக்ரி, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை கடந்த டிச.17-ஆம் தேதி உறுதிசெய்தாா். இதுதொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இல்லாத நிலையில், விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதில் முறையீட்டு நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும் என்பது வழக்கமான சட்ட நடைமுறை.

விடுவிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கும் குற்றமற்றவா் என்பதற்கான இரட்டை அனுமான கோட்பாட்டு இந்த வழக்கில் முறையாகக் கையாளப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை இரு நிலைகளில் செயல்படுகிறது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனில் ஒவ்வொரு நபரும் குற்றமற்றவராகக் கருதப்படுவாா்.

இரண்டாவது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் விடுதலையானது குற்றமற்றவா் என்ற அனுமானத்தை மேலும் உறுதிபடுத்துகிறது.

விசாரணை நீதிமன்றத்தின் முடிவின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தில்லி காவல் துறை தவறியுள்ளது. அந்த நபரை விடுவித்து பிறப்பித்த உத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com