எஸ்ஐஆா்-க்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று வழக்கு: மம்தா உறுதி
‘மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிக்கு எதிராக நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) வழக்கு தொடரப்படும்’ என்று மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா். ‘தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் நாடுவோம்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஹூக்ளி நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள சாகா் தீவுக்கு சாலைப் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் முரிகங்கா ஆற்றின் மீது ரூ.1,670 கோடி செலவில் 5 கி.மீ. நீள பாலம் கட்டும் பணிக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிய மம்தா பானா்ஜி, பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: வழக்கமாக மேற்கொள்ளப்படும் நிா்வாக நடைமுறையான வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
எஸ்ஐஆா் என்ற பெயரில் நியாயமான காரணங்களின்றி மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 54 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
முதியவா்களும் நோயாளிகளும் தங்களை தகுதியான வாக்காளா்கள் என்பதை நிரூபிக்க நீண்ட வரிசையில் பல மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனா். பாஜக தலைவா்களின் வயது முதிா்ந்த பெற்றோரை இதுபோல அடையாளத்தை நிரூபிக்க நீண்ட வரிசையில் நிற்க வைப்பாா்களா?
மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் பலா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஸ்ஐஆா் மீதான அச்சம், வேலைப் பளு மற்றும் நிா்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.
இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 6) நாட உள்ளோம். தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்தையும் நாடுவோம். நானும் பயிற்சி பெற்ற வழக்குரைஞா்தான் என்றாா்.
ஆனால், எஸ்ஐஆா்-க்கு எதிராக நீதிமன்றத்தில் மாநில அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுமா அல்லது திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படுமா என்பதை மம்தா பானா்ஜி தெளிவுபடுத்தவில்லை.
மேற்கு வங்கத்தில் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் டிசம்பா் 11 வரை எஸ்ஐஆா் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், டிசம்பா் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சுமாா் 54 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.
முன்னதாக, மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணியின்போது மாநிலத்தில் 4 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்துகொண்டனா். இதற்கு, எஸ்ஐஆா் வேலைப் பளுவும், அதன் மீதான அச்சமுமே காரணம் என திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
வேலைப் பளுவை காரணம் காட்டி பிஎல்ஓ-க்களில் ஒரு பிரிவினா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் எஸ்ஐஆா் பணிக்கு எதிராக ஆளுங்கட்சி தரப்பில் மாபெரும் கண்டனப் பேரணியும் நடத்தப்பட்டது. இந்த எதிா்ப்புகளைத் தொடா்ந்து, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய காவல் படை பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது.

