

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு பாஜக விளக்கமளிக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் துலேவில் பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசுகையில், "நான் இதனைச் சொல்கிறேன். இந்தியா 68 ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்ததாகவும், 5 ஆண்டுகளாக அவற்றைப் பெறாமல் இருந்ததாகவும் நாளை டிரம்ப் கூறுவார்.
டிரம்ப்பை சந்திக்கச் சென்ற பிரதமர் மோடி, 'சார், தயவுசெய்து நான் உங்களைச் சந்திக்கலாமா?' என்று கேட்டுள்ளார். இதுகுறித்து பாஜக விளக்கமளிக்க வேண்டும்.
அவர்களின் (பாஜக) தேசப்பற்று எங்கே? முகலாயர்கள், பாகிஸ்தான், வங்கதேசம் என்றால் மட்டும் அவர்கள் சத்தமாகப் பேசுகின்றனர். ஆனால், டிரம்ப்பை பற்றியது என்றால், மௌனம் காக்கின்றனர். டிரம்ப்பை பார்த்து பாஜகவினர் ஏன் பயப்படுகின்றனர்?
பிரதமர் மோடியை வெளிப்படையாக டிரம்ப் அவமதிக்கிறார். நீங்களும் (பாஜக) முட்டாள்போல அதனைப் பொறுத்துக் கொள்கிறீர்கள்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், "இந்தியா 68 ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்த நிலையில், பிரதமர் மோடி என்னைச் சந்திக்க வந்தார். சார். உங்களைச் சந்திக்கலாமா? என்று கேட்டார். அவருடன் எனக்கு நல்ல உறவு இருப்பதால் சம்மதித்தேன்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியை டிரம்ப் அவமதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.