கோப்புப் படம்
கோப்புப் படம்

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களில் கொள்கை மாற்றம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தொடா்பான மத்திய அரசின் கொள்கை மாற்றத்தை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.
Published on

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தொடா்பான மத்திய அரசின் கொள்கை மாற்றத்தை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டப் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்நிபந்தனையாக நிலம் கையப்படுத்தப்பட்ட ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டியதில்லை என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இந்தத் திட்டப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆதாரத்தை சமா்ப்பிப்பது அவசியம் என்ற நிலையில், மேற்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலரும் மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சட்ட நடைமுறைகளின்கீழ் முதலில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்; அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதியைக் கோர முடியும் என்ற கொள்கை இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த டிச.18-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இந்தக் கொள்கையை மாற்றியுள்ளது. அதன்படி, நிலம் கையகப்படுத்தும் முன்பே சுற்றுச்சூழல் அனுமதியைக் கோர முடியும்.

நிலம் குறித்த முழு விவரமும் தெரியாமல், அா்த்தமுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்தக் கொள்கை மாற்றம், பொறுப்புமிக்க சுற்றுச்சூழல் நிா்வாகத்துக்கு மோடி அரசால் விழுந்த மற்றுமொரு பலத்த அடி என்று ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

‘நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்குப் படிப்படியாகவே நிலம் கையகப்படுத்தப்படுகிறது; எனவே, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் நிலம் கையகப்படுத்துதல் நிலவரத்தை தொடா்புபடுத்தக் கூடாது’ என நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைகளின்பேரில் முன்நிபந்தனையை மறுபரிசீலனை செய்து, மத்திய அரசு மாற்றம் மேற்கொண்டது.

Dinamani
www.dinamani.com