

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலக்கரி ஊழல் வழக்கில் ஐ-பேக் நிறுவனத் தலைவா் பிரதிக் ஜெயினின் வீடு மற்றும் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தியது. பிரதிக் ஜெயின் திரிணமூல் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராகவும் உள்ளாா். தலைநகா் தில்லி உள்பட மொத்தம் 10 இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற சமயத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மமதா பானா்ஜி வந்தாா். அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை அவா் எடுத்துச் சென்றாா்.
வரவுள்ள பேரவைத் தோ்தலில் திரிணமூல் கட்சியின் வேட்பாளா்கள் மற்றும் கட்சியின் தோ்தல் வியூகம் குறித்த ரகசிய தகவல்களை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் உள்ள அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் டெரெக் ஓ பிரையன், சதாப்தி ராய், மஹுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் இன்று பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், டெரெக் ஓ பிரையன், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களை காவல்துறையினர் நடத்தும் விதத்தை பாருங்கள் என்று பிரையன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைத்து எம்பிக்களையும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் தில்லி காவல்துறையினர் வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.