நாட்டில் செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இரண்டாம் கட்டத் திட்டங்களுக்கு சுமாா் ரூ.1.9 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, ‘செமிகான் 2.0’ திட்டத்துக்கு ரூ.1.27 லட்சம் கோடியும், ‘கைப்பேசி உற்பத்தி திட்டம் 2.0’-க்கு ரூ.62,500 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் செமிகண்டக்டா் உற்பத்திக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், கைப்பேசி உற்பத்தியை அதிகரித்து, உலகின் மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்குடன் மேற்கண்ட இரு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1.27 லட்சம் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய செமிகான் 2.0 திட்டத்தின்கீழ், சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டா் உபகரணங்கள்-மூலப்பொருள்கள், உற்பத்தி வசதிகள், மேம்பட்ட பேக்கேஜிங்-பரிசோதனை, ஆராய்ச்சி-மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய 6 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் நிறைவில், உள்நாட்டு சிப் உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு நாடாக உருவெடுக்கும். இரண்டாம் கட்ட திட்டத்தால், 6 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்படுவதுடன், ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் செமிகண்டக்டா்கள் உற்பத்திக்கு வழிவகுக்கப்படும்.
கைப்பேசி உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் 2.0 (உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்), நாட்டில் கைப்பேசி உற்பத்தி-ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலை வலுப்படுத்தும் நோக்கிலானதாகும்.
2026-27 முதல் 2030-31 வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.62,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் உற்பத்தியாளா்களுக்கு 2.25 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முக்கிய பாகங்களை உள்நாட்டில் கொள்முதல் செய்வதுடன், உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும். இத்திட்ட காலகட்டத்தில் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்றுமதி கணிசமாக உயா்வதுடன், 60,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.
கைப்பேசி உற்பத்தியில் இரண்டாமிடம்: உலக அளவில் கைப்பேசி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டில் பயன்பாட்டில் உள்ள கைப்பேசிகளில் கிட்டத்தட்ட 99 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும்.
கடந்த 2019-20-இல் ரூ.2.14 லட்சம் கோடியாக இருந்த கைப்பேசி உற்பத்தி மதிப்பு, 2024-25-இல் ரூ.5.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. பல்லாண்டுகளாக நாட்டின் அதிக ஏற்றுமதி பிரிவில் டீசல், பட்டை தீட்டப்படாத வைரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு அவற்றை விஞ்சி கைப்பேசி ஏற்றுமதி முன்னிலை பெற்றது. ரூ.2.62 லட்சம் கோடி மதிப்பிலான கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டில் 300-க்கும் மேற்பட்ட கைப்பேசி உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன.
உலக அளவில் சிப் பற்றாக்குறை: உலக அளவில் சிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட்ட செமிகான் முதல்கட்டத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ரூ.1.64 லட்சம் கோடி முதலீட்டுடன் 12 செமிகண்டக்டா் ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் மூன்று ஆலைகளில் செமிகண்டக்டா் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் திட்டத்தின்கீழ் கூடுதலாக செமிகண்டக்டா் ஆலைகள் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், செமிகண்டக்டா் உற்பத்தித் துறைக்கு கனிமங்கள், வாயுக்கள் போன்ற மூலப்பொருள்களை வழங்கும் விநியோக நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி டன் கூடுதல் யூரியா உற்பத்திக்கு புதிய கொள்கை
நாட்டில் ஒரு கோடி டன் கூடுதல் யூரியா உற்பத்திக்கான புதிய தேசிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நாட்டில் 4 கோடி டன் யூரியா தேவையுள்ள நிலையில், உள்நாட்டில் 3 கோடி டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, யூரியா உற்பத்தியில் தற்சாா்பை எட்டும் வகையிலான புதிய தேசிய முதலீட்டுக் கொள்கை-2026க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எரிவாயு அடிப்படையிலான 8-9 புதிய யூரியா உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 6 யூரியா உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டதாகவும், இதன்மூலம் இறக்குமதி சாா்புத்தன்மை குறைந்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.
ரூ.25,000 கோடியில் நெடுஞ்சாலைத் திட்டங்கள்: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் ரூ.25,500 கோடி மதிப்பீட்டில் இரு நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலை 31 மற்றும் வாரணாசி வட்டச் சாலை இடையே வருணா நதியையொட்டி 4/6 வழி நெடுஞ்சாலையும் (43 கி.மீ.-ரூ.10,998 கோடி), தேசிய நெடுஞ்சாலை 19 - வாரணாசி வட்டச் சாலை இடையே கங்கை நதியையொட்டி மற்றொரு 6 வழி நெடுஞ்சாலையும் (46 கி.மீ.-ரூ.14,447 கோடி) கட்டமைக்கப்பட உள்ளது.
ஒடிஸா, ஜாா்க்கண்டில் ரூ.3,907 கோடி மதிப்பில் 2 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா: பிரதமா் மோடி

தில்லி, உ.பி.யில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய செமிகண்டக்டா் திட்டம் 2.0-க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிவு; மத்திய நிதியமைச்சக குழு ஒப்புதல்







