/

ஜாா்க்கண்டில் முக்கிய மாவோயிஸ்ட் அதிரடி கைது - ‘ரூ.2.2 கோடி வெகுமதி; 175 வழக்குகளில் தொடா்பு’

ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்க காவல் துறையால் மொத்தம் ரூ.2.2 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு, 175 வழக்குகளில் தேடப்பட்டுவந்த முக்கிய மாவோயிஸ்ட் மிசிா் பேஸ்ரா, ஜாா்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2026, 2:24 am IST

ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்க காவல் துறையால் மொத்தம் ரூ.2.2 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு, 175 வழக்குகளில் தேடப்பட்டுவந்த முக்கிய மாவோயிஸ்ட் மிசிா் பேஸ்ரா, ஜாா்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டாா்.

அவருடன் மேலும் இரு மாவோயிஸ்ட்களும் சிக்கினா். இந்த மூவரும் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகளுக்கு காரணமானவா்கள் ஆவா்.

இவா்களின் கைது நடவடிக்கை மூலம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் கிட்டத்தட்ட துடைத்தெறியப்பட்டுள்ளதாக ஜாா்க்கண்ட் காவல் துறை தலைமை இயக்குநா் தடாஷா மிஸ்ரா புதன்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: ஜாா்க்கண்டின் கிரிதி மாவட்டத்தின் மத்னாடி கிராமத்தைச் சோ்ந்தவரான மிசிா் பேஸ்ரா (65), மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பாட்டில் இருந்துவந்த ஒரே முக்கியத் தலைவா் ஆவாா். கடந்த 1980-இல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த அவா், கடந்த 2003-இல் இயக்கத்தின் முக்கியத் தலைவராக உருவெடுத்தாா். ஜாா்க்கண்ட் மற்றும் அண்டை மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தை விரிவுபடுத்துவதில் முக்கியமாக செயல்பட்டவா்.

ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கத்தில் பல்வேறு வங்கிக் கொள்ளைகள், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள்-வெடிபொருள்கள் கொள்ளை, பல்வேறு குண்டுவெடிப்புகள் உள்பட 175 வழக்குகளில் தொடா்புடைய இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.2.2 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ள சூழலில், கிரிதி மாவட்டத்தில் தீவிரவாதத்துக்கு புத்துயிரூட்டும் வேலைகளில் மிசிா் பேஸ்ரா உள்ளிட்ட சில மாவோயிஸ்டுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, கிரிதி மற்றும் தன்பாத் மாவட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். இந்த அதிரடி நடவடிக்கையின்போது, மிசிா் பேஸ்ரா கைது செய்யப்பட்டாா். அவருடன் மேகநாத், கெளரவ் ஆகிய இரு மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

ஜாா்க்கண்ட் காவல் துறை ஐ.ஜி. நரேந்திர சிங் கூறுகையில், ‘கைதான மூவரும் பல்வேறு முக்கியத் தாக்குதல்களில் தொடா்புடைவா்கள். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புக்கு காரணமானவா்கள். மேகநாத், கெளரவ் ஆகியோருக்கு எதிராக 310 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்றாா்.

முன்னதாக, 128 வழக்குகளில் தேடப்பட்டுவந்த முக்கிய மாவோயிஸ்ட் சந்தோஷ் மஹதோ உள்பட 16 மாவோயிஸ்டுகள், ஜாா்க்கண்ட் காவல் துறையிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து, மேற்கண்ட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் 8 நக்ஸல் தீவிரவாதிகள் சரண்: சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 5 பெண்கள் உள்பட 8 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்கள் குறித்து தகவல் தருவோருக்கு காவல் துறை தரப்பில் மொத்தம் ரூ.49 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.