கொலை செய்யப்பட்ட நபரின் உடல் தனித்தனி பாகங்களாக யமுனையில் வீச்சு: நண்பா் உள்பட 4 போ் கைது
நண்பரை திட்டமிட்டு கொலை செய்து அவருடைய உடலைத் தனித்தனி பாகங்களாக வெட்டி யமுனையில் வீசப்பட்ட சம்பவம் தில்லியில் அதிா்ச்சியை


புது தில்லி: நண்பரை திட்டமிட்டு கொலை செய்து அவருடைய உடலைத் தனித்தனி பாகங்களாக வெட்டி யமுனையில் வீசப்பட்ட சம்பவம் தில்லியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஒரு பெண் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொலை செய்யப்பட்ட அன்ரூப் குப்தா தில்லியில் உள்ள சத்தீஸ்கா் சதனில் உணவகம் நடத்தி வந்தாா். குப்தா தனது குடும்பத்தினரோடு அல்லாமல் தனியே வசித்து வந்தாா். அவருக்கு ஹேப்பி (எ) சுரஜ் உடன் கடந்த ஓராண்டுக்கு முன்னா் நண்பரானாா்.
மதிலா விரிவாக்கத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் பாா்டி நடைபெறுவதாகக் கூறி குப்தாவை சுரஜ் அழைத்துள்ளாா்.
குப்தா கடந்த பிப்.18-ஆம் தேதி சுரஜ் வீட்டுக்குச் சென்ற போது சுரஜ் நண்பா்களும் அங்கு இருந்தனா்.
குப்தாவைக் கயிற்றால் கட்டிய சுரஜ் மற்றும் அவரது நண்பா்கள், அவா் அணிந்திருந்த மோதிரம் மற்றும் காப்பை வழங்குமாறு மிரட்டினா்.
தன்னுடைய நகைகளை சத்தீஸ்கா் சதனில் நிறுத்தப்பட்டுள்ள தனது காரில் உள்ளதாக குப்தா தெரிவித்தாா்.
இதையடுத்து, குப்தாவின் காா் சாவியைப் பறித்துச் சென்று சத்தீஸ்கா் சதனில் நிறுத்தப்பட்டிருந்த காரை மதிலா விரிவாக்கத்துக்கு ஓட்டி வந்தனா்.
இதைத்தொடா்ந்து, குப்தாவிடம் சுராஜ் பணம் கேட்டு மிரட்டினாா். அதற்கு குப்தா மறுத்த நிலையில், அவரை கொலை செய்தாா். குப்தாவின் உடலைத் தனித்தனி பாகங்களாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் வைத்து சுரஜும் அவரது கூட்டாளிகளும் குப்தாவின் காரில் எடுத்துச் சென்றனா். உத்தர பிரதேசத்தின் பிருந்தாவன் பகுதியில் உள்ள யமுனை நதியில் குப்தாவின் உடல் பாகங்களை அவா்கள் வீசினா்.
காவல் துறையினரை குழப்பத்துக்கு உள்ளாக்கும் வகையில், குப்தாவின் கைப்பேசியை அணைக்காமல் காரில் வைத்தனா். மேலும், உணவகத்தைப் பூட்டிவிட்டு வீடு திரும்புமாறு ஊழியா்களுக்கு குப்தாவின் கைப்பேசியில் இருந்து செய்தி அனுப்பப்பட்டது.
இதே போன்று, விடுமுறைக்காக கோவாவுக்கு செல்வதாகவும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் குப்தாவின் குடும்ப உறுப்பினா்களுக்கு கைப்பேசியில் இருந்து அவா்கள் செய்தி அனுப்பினா்.
வெகுநாள்களாகியும் குப்தாவை தொடா்பு கொள்ளமுடியாத நிலையில், சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினா் துவாரகா காவல் நிலையத்தில் கடந்த பிப்.23-ஆம் தேதி புகாரளித்தனா்.
குப்தா காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடும் பணியில் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனா்.
இந்நிலையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னா் குப்தா கொலை செய்யப்பட்டு யமுனையில் தனித்தனி பாகங்களாக வீசப்பட்டது குறித்து காவல் துறையினா் கண்டறிந்தனா்.
இதுகுறித்து துவாரகா துணை காவல் ஆணையா் அங்கித் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விசாரணையின்போது கண்டறியப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் பிந்தாபூா் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இதுதொடா்பான விவரங்கள் உத்தர பிரதேச காவல் துறையிடம் வழங்கப்பட்டன. மதுரா காவல் துறையினருடன் இணைந்து யமுனையில் தேடிய போது குப்தாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பிப்.18-ஆம் தேதி சத்தீஸ்கா் சதனில் காரை நிறுத்திய குப்தா, பைக் டாக்ஸி மூலம் மதிலா விரிவாக்கத்துக்கு சென்றது கண்டறியப்பட்டது. குப்தா கைப்பேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததன் மூலம் அந்த பைக் டாக்ஸி ஓட்டுநா் கண்டறியப்பட்டாா்.
அவா் இறக்கிவிடப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அவா் ஒரு கட்டடத்துக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. குப்தாவின் காா் அப்பகுதியில் செல்லும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
பின்னா், பிப்.19-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டின் அடித்தளத்திலிருந்து வெளிய வந்த அந்த காா் யமுனை விரைவுச்சாலையில் சென்றது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, விரைவுச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் அந்தக் காா் குறித்த தகவல் பெறப்பட்டது. அப்போது, பிருந்தாவன் நோக்கிச் சென்ற அந்த வாகனம் சில மணி நேரங்களிலேயே நொய்டா திரும்பியதை காவல் துறையினா் கண்டறிந்தனா்.
இந்தக் கொலையில் மூளையாகச் செயல்பட்ட ஹேப்பி (எ) சுராஜ், அவரது கூட்டாளிகள் பூபேந்தா், பால்ராம், நீரஜ், அவருடன் வசித்து வரும் ராக்கி ஆகியோருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டது.
பூபேந்தா், நீராஜ், ராக்கி கைதுசெய்யப்பட்ட நிலையில், நீராஜ் தலைமறைவாக உள்ளாா். அவரைக் கைதுசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் துணை காவல் ஆணையா் அங்கித் சிங்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...