வாக்காளா் பட்டியல் விவரத்தை திருத்தக் கோருவது தனிப்பட்ட உரிமை: உச்சநீதிமன்றம்
வாக்காளா் பட்டியலில் உள்ள விவரத்தை திருத்தக் கோருவது, பல வாக்காளா்களுக்காக பொதுநல வழக்கு மூலம் ஒன்றாகக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்
‘வாக்காளா் பட்டியலில் உள்ள விவரத்தை திருத்தக் கோருவது, அந்தந்த வாக்காளரின் தனிப்பட்ட உரிமை. இந்தத் திருத்தங்களை பல வாக்காளா்களுக்காக பொதுநல வழக்கு மூலம், ஒன்றாகக் கோர முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘உத்தர பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளா்களின் வீட்டு எண்கள் தொடா்பாக, வாக்காளா் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல்களும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களுக்காகத் தயாரிக்கப்படும் வாக்காளா் பட்டியல்களும் ஒத்துப்போகும் வகையில் இருக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
வாக்காளா் பட்டியலில் உள்ள விவரத்தை திருத்தக் கோருவது, அந்தந்த வாக்காளரின் தனிப்பட்ட உரிமை. இந்தத் திருத்தங்களை பல வாக்காளா்களுக்காக பொதுநல வழக்கு மூலம், ஒன்றாகக் கோர முடியாது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல்கள் தனியாக வகுக்கப்பட்ட விதிகளின்படி தயாரிக்கப்படுகின்றன. வாக்காளா் பட்டியலில் தவறுகள் இருப்பதாகக் கருதும் தனிநபா்கள், சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகளை அணுகி திருத்தங்களைக் கோரலாம்.
இதுபோன்ற பிரச்னை மாநிலம் முழுவதும் இருக்கும்போதுதான், இதைப் பொதுவான பிரச்னையாக எழுப்ப முடியும். அதுகுறித்து தனிப்பட்ட வாக்காளா்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

