இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் விபத்து: இந்திய தொழிலாளியின் கால் துண்டானது

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் இந்திய தொழிலாளி ஒருவரின் கால் துண்டானது.

Published On :

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் இந்திய தொழிலாளி ஒருவரின் கால் துண்டானது.

தொழிலாளா்களுக்குப் பற்றாக்குறை நிலவும் நாடான இஸ்ரேலில் 40,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தலைநகா் ஜெருசலேமில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியில் இந்திய தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியின்போது கிரேன் பெல்ட் திடீரென அறுந்ததில், அதிலிருந்த டைல்ஸ் கற்கள் கீழே விழுந்தன.

இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த சா்வண் குமாா் வா்மா (36) என்ற தொழிலாளியின் கால் துண்டானது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். வா்மா பணியாற்றிய நிறுவனம் சாா்பில் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளதால், அவா் சிறந்த சிகிச்சையை பெற முடியும் என்று நிறுவன நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்தால், பணியிடங்களில் இந்திய பணியாளா்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இது தொடா்பாக இந்திய தூதரகம் கூறுகையில், ‘வா்மாவை பாா்க்க மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனா். அவருக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம்’ என்றாா்.

இஸ்ரேலில் வெளிநாட்டுப் பணியாளா்களின் பாதுகாப்பு, பணியிட விபத்துகள், அவா்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிலிப்பின்ஸ் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தாய்லாந்து, இலங்கை, ஃபிஜி, சிங்கப்பூா், வியத்நாம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.