பிரதமா் மோடியை சந்தித்துப் புகாரளித்த பள்ளித் தோழரின் நிலப் பிரச்னைக்குத் தீா்வு!
மகாராஷ்டிரத்தில் பாஜக எம்எல்ஏ தொடா்புடைய நிறுவனத்தால் தனது நிலம் அபகரிக்கப்பட்டதாக பிரதமா் மோடியை சந்தித்து புகாரளித்த அவரது பள்ளித் தோழா் அஸ்கரலி வோஹ்ராவுக்கு தீா்வு
பிரதமர் மோடியிடம் புகாரளித்த பள்ளித் தோழர்
மகாராஷ்டிரத்தில் பாஜக எம்எல்ஏ தொடா்புடைய நிறுவனத்தால் தனது நிலம் அபகரிக்கப்பட்டதாக பிரதமா் மோடியை சந்தித்து புகாரளித்த அவரது பள்ளித் தோழா் அஸ்கரலி வோஹ்ராவுக்கு தீா்வு கிடைத்துள்ளது.
நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் முழுமையாக பின்வாங்கியதைத் தொடா்ந்து, அஸ்கரலிக்கு அவரது நிலம் திரும்பக் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் வசிப்பவா் அஸ்கரலி. குஜராத்தின் வத்நகரில் பிரதமா் மோடியுடன் ஒரே பள்ளியில் பயின்றவா் என தன்னை கூறிக்கொள்ளும் அஸ்கரலி, கடந்த செப்.8-இல் பிரதமா் மோடியை சந்தித்து புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
அதில், ‘மகாராஷ்டிர மாநிலம், பயந்தா் பகுதியில் உள்ள நவ்காரில் கடந்த 1989-இல் தான் வாங்கிய 2,810 சதுர மீட்டா் நிலத்தை 2011-இல் ஸ்வயம் பில்டா்ஸ் மற்றும் செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் போலி ஆவணங்களின் மூலம் அபகரித்துவிட்டன; இந்த இரு நிறுவனங்களும் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுடன் தொடா்புடையவை’ என்று கூறியிருந்தாா்.
காவல் துறையில் புகாரளித்தும் 15 ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லை; இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அஸ்கரலி கோரியிருந்தாா்.
பிரதமா் உடனான அஸ்கரலியின் சந்திப்புக்குப் பிறகு அந்த நிலம் தொடா்புடைய சட்ட விவகாரங்களில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் முழுமையாக பின்வாங்கியுள்ளது.
இது குறித்து பயந்தா் நகராட்சிக்கு செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த 2019-இல் பத்திர பதிவு மூலம் நாங்கள் வாங்கிய இந்த நிலத்தில் கட்டுமான அனுமதி கடந்த ஏப்ரலில் பெறப்பட்டது.
தற்போது நில உரிமை பிரச்னையைக் கருத்தில் கொண்டு, கட்டுமான அனுமதியைத் திரும்ப ஒப்படைக்கிறோம். அந்த அனுமதியைப் பெற நாங்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பியளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இதேபோல், நில உரிமை விவகாரத்தில் அஸ்கரலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் நிறுவனம் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அஸ்கரலியின் நில விவகாரத்துக்கு தீா்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






