
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை - கோப்புப்படம்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்(எம்டிஆர்) கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
வழக்கறிஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்த இந்த வழக்கில், ரூ. 2,000-க்கு மேல் செய்யப்படும் வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வருகிற அக். 15 முதல் அமல்படுத்தப்படவுள்ள 0.4% கட்டணம் விதிக்கும் முறையை அவர் கேள்விக்குட்படுத்தினார். செப். 14 - 15 தேதியிட்ட அந்தக் குறிப்பிட்ட அறிவிப்புகளை ரத்து செய்யவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
மனுதாரர் பேசுகையில், யூபிஐ மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புதிய கட்டணங்கள் இந்த முறையை ஊக்கமிழக்கச் செய்யும் என்றும் வாதிட்டார்.
மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன், “புதிய விதிமுறையின் அமலாக்கம் அக். 15 முதல் தொடங்கவுள்ளது. இதில், 96% கேட்வே பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு ரூ. 5 உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒட்டுமொத்த பரிவர்த்தனை மதிப்புக்கும் ஒரு உச்சவரம்பு உள்ளது. இது வரியோ கட்டணமோ அல்ல. இது ஒரு தொழில்துறை தீர்வுக்கான வழிமுறை” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், இதுதொடர்பாக எந்தவொரு இடைக்கால நிவாரணமும் வழங்க முன்வரவில்லை.
ஆனால், கட்டண விதிப்பு தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் பற்றிய விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Summary
The Supreme Court has refused to stay the system of levying charges on UPI transactions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






