Enable Javscript for better performance
88. சிறப்பு யாருக்கு?- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  ‘‘அடேய் மகனே.. அருகே வாடா..’’

  படு உற்சாகமாகக் குரல் கொடுத்தார் குருநாதர். சிஷ்யனை இப்படிச் சொல்லி அவர் அழைக்கும் தருணங்கள் மிகவும் அபூர்வம்.

  அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கும்போதுதான் இப்படி அழைப்பார். அன்றும் அப்படித்தான்.

  குருவின் உற்சாகம் சிஷ்யனுக்கும் தொற்றிக்கொண்டது. எகிறிக் குதித்தபடி அவர் முன்னால் வந்து நின்றான்.

  ‘‘இன்றைய கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டாயா?’’ என்று கேட்டார் குருநாதர்.

  ‘‘ஏறக்குறைய முடித்துவிட்டேன். இன்னும் ஓரிரு பணிகள் மட்டும்தான் பாக்கி இருக்கின்றன’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘நல்லது!’’ என்றார் குரு.

  கூடவே குறும்பு கொப்பளிக்கும் முகத்துடன் சிஷ்யனைப் பார்த்துக் கேட்டார்.. ‘‘உனக்கு தினமும் கட்டளைகளையும் போதனைகளையும் கொடுக்கும் நான் சிறப்பானவனா? அல்லது என் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் நீ சிறப்பானவனா? நம்மில் யாருக்கு மதிப்பு அதிகம்?’’ என்று கேட்டுவிட்டு கண் சிமிட்டினார்.

  ‘‘இதென்ன சோதனை!’’ என்று பதறினான் சிஷ்யன். ‘‘நீங்கள் குரு. நான் சிஷ்யன். உங்களையும் என்னையும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்?’’ என்று பதட்டத்துடன் கேட்டான்.

  அவனது பேச்சைக் கேலி செய்து சிரித்தார் குருநாதர். ஒரு குழந்தையைப் போலவே அவர் மாறி இருந்தார்.

  ‘‘அதெல்லாம் சமாளிக்கக் கூடாது. நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?. என்ன நினைக்கிறாய் என்பதைக் கூறு..’’ என்று அவனை வம்புக்கு இழுத்தார்.

  ‘‘அறியா சிறுவனாக இருக்கும் எனக்கு அறிவைக் கொடுத்து ஆளாக்கும் குருநாதராகிய நீங்கள்தான் மதிப்புமிக்கவர். என்றென்றும் என்னைவிட பல்லாயிரம் மடங்கு சிறப்பானவர். இதிலென்ன சந்தேகம்..’’ - உறுதியான குரலில் பதில் சொன்னான் சிஷ்யன்.

  கபகபவென சிரித்தார் குருநாதர்.

  சிஷ்யனுக்கு தலை சுற்றாத குறை! தான் கூறிய உண்மையான பதிலுக்கு இப்படி சின்னக் குழந்தைபோல சிரித்து கிண்டல் செய்கிறாரே குரு‌நாதர் என ஒருதரம் யோசித்தான். அவனது யோசனையை கலைத்தார் குருநாதர்.

  ‘‘அடேய் பையா.. நீ சொன்னதுதான் உண்மையென நீ மட்டும் இல்லை, இந்த உலகமே அப்படித்தான் நம்பிக்கொண்டு இருக்கிறது. கற்றுக்கொடுப்பவனும் கட்டளைகள் கொடுப்பவனும்தான் உயர்ந்தவன் என தவறாக நம்பிக்கொண்டிருக்கிறது’’ என்றார். தொடர்ந்தார்.

  ‘‘கற்றுக்கொடுப்பவனின் திறமையையும் தகுதியையும் கற்றுக்கொள்பவன்தான் உறுதி செய்கிறான். கற்பிக்கப்படும் பாடங்களில் அவன் தேர்ச்சி பெற்றால்தான், கற்பித்தவனுக்கான கௌரவம் உறுதிப்படுத்தப்படும். கீழ்படியத் தெரியாதவனுக்கு போதனைகள் வழங்கினால் அது விழலுக்கு இறைத்த நீராகும். கேட்டவனுக்கும் பலனில்லை. சொன்னவனுக்கும் மதிப்பில்லை. கட்டளைகளுக்கு கீழ்படிபவனே எதிர்காலத்தில் கட்டளையிடத் தகுதியானவனாக உயர்கிறான். அதனால் கற்றுக்கொடுக்கும் என்னைவிட கவனமாகப் படிக்கும் நீயே மதிப்பு மிகுந்தவன்..’’ என்று புன்னகை மாறாமல் கூறி அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார் குருநாதர்.

  குருவின் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் சிஷ்யனின் மனம் மறுதலித்தது. அதனை அவன் முகத்தில் படித்துக்கொண்டார் குரு. முத்தாய்ப்பாக ஒன்றை சொல்ல முயன்றார்.

  ‘‘குழந்தையை பெற்றுக்கொண்ட பிறகுதான் ஒரு பெண் தாயாக மாறுகிறாள். அவள்தான் குழந்தையை பிரசவித்தாள் என்றாலும் அவளுக்கு தாய் என்ற பெருமை கிடைக்கச்செய்வது பிறந்த குழந்தைதான். அதுவரை அவளுக்குப் பெண் என்று மட்டுமே பெயர். அப்படித்தான் இதுவும். உன்னைப்போன்ற சிறந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம்தான் சிறப்பானவன் என்ற அடையாளம் எனக்கு கிடைக்கும். அதனால்தான் சொல்கிறேன், என்னைவிட நீயே மதிப்பு மிகுந்தவன்..’’ என்று கூறிய குரு அத்துடன் நில்லாமல் சிஷ்யனை அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றினார்.

  அவர் இறக்கிவிட்டதும் ஜிவ்வென்றிருந்தது சிஷ்யனுக்கு!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai